சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்திலும், ஹரியானாவிலும் நடந்த அப்பட்டமான தேர்தல் முறைகேடுகளுக்கு நீதி கிடைக்காத வகையில், ஒன்றிய சட்ட அமைச்சகம் தேர்தல் நடத்தை விதிமுறைகளையே மாற்றியிருப்பது எதிர்காலத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கையை முழுமையாக இழந்து விடக்கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் வாக்காளர்கள் பட்டியல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், தேர்தல் வாக்கெடுப்பு அன்று நடந்த பல்வேறு முறைகேடுகள் என ஒன்றன்பின் ஒன்றாக அம்பலத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற அன்று மாலை 5 மணிக்கு, தற்காலிகமாக அறிவித்த பதிவான மொத்த வாக்குகளை விட, இரவு 11.30 மணிக்கு இறுதியாக அறிவிக்கப்பட்டதில் 76 லட்சம் வாக்குகள் கூடுதலாக பதிவானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
பொதுவாக, வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கு மேல் வாக்களிக்க வரிசையில் நிற்பவர்களுக்கு எண்ணுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும். அப்படி வழங்கப்படுகிற அனுமதி சீட்டு 100-க்கும் குறைவாகத் தான் இருக்கும். ஆனால் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிற 76 லட்சம் கூடுதலான எண்ணிக்கையை பார்க்கிற போது, ஒரு வாக்குச்சாவடியில் கூடுதலாக ஆயிரம் பேர் வாக்களிக்க வேண்டுமென்றால் ஆயிரம் நிமிடங்களாவது தேவைப்படும். அதாவது, ஆறரை மணி நேரம் செலவழிக்காமல் அவர்கள் வாக்களிக்க முடியாது. எனவே, இத்தகைய சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பே கிடையாது. இதுவரை நடைபெற்ற அனைத்து மக்களவை தேர்தல்களிலும் தற்காலிக அறிவிப்புக்கும், இறுதி அறிவிப்புக்கும் ஒரு சதவிகித வேறுபாடு தான் இருக்கும். ஆனால், மகாராஷ்டிரா மாநில அறிவிப்பில் 8 சதவிகித வேறுபாடு இருக்கிறது. இதைப்போலவே ஹரியானாவில் ஏற்பட்ட வேறுபாடு குறித்து, பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் வாக்குச்சாவடி சம்மந்தமான அனைத்து மின்னணு ஆவணங்கள், வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள் போன்ற அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் வழக்கு தொடுத்த மனுதாரருக்கு வழங்க வேண்டுமென்று நீதிமன்றம் ஆணையிட்டது.
இந்நிலையில், அவசர அவசரமாக ஒன்றிய சட்ட அமைச்சகம் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளை திருத்தம் செய்திருக்கிறது. ஏற்கனவே, 1961 தேர்தல் நடத்தை விதிமுறைகளில் 93 (2)-ன்படி தேர்தல் சம்மந்தமான அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிற மனுதாரருக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது செய்யப்பட்ட திருத்தத்தின்படி, இத்தகைய ஆவணங்களை வழங்குவதிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்படி, நீதிமன்றம் கேட்டால் கூட ஆவணங்களை வழங்காமல் இருக்கிற உரிமையை தேர்தல் ஆணையம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் மீதுள்ள நம்பகத்தன்மையை இழந்த நிலையில், இத்தகைய திருத்தத்தின் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையை செய்திருக்கிறது.
மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானாவில் சுதந்திரமாகவும், சுயேட்சையாகவும் வெளிப்படைத் தன்மையோடும் பாரபட்சமின்றி தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் இந்தியா கூட்டணி ஜார்க்கண்ட்டில் வெற்றி பெற்றதைப் போல, மகாராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் நிச்சயம் வெற்றி பெறும் என்று நாடே எதிர்பார்த்தது. தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் குறித்து ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுகினாலும், இதில் தலையிட முடியாது. இதற்கு ஒரே தீர்வு தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடுப்பது தான் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பது பாஜக ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது. இதனால் ஜனநாயகம் சிதைத்து சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்திலும், ஹரியானாவிலும் நடந்த அப்பட்டமான தேர்தல் முறைகேடுகளுக்கு நீதி கிடைக்காத வகையில், ஒன்றிய சட்ட அமைச்சகம் தேர்தல் நடத்தை விதிமுறைகளையே மாற்றியிருப்பது எதிர்காலத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கையை முழுமையாக இழந்து விடக்கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் வெளியாகிற வாக்களித்திருப்பவர்களின் எண்ணிக்கைக்கும், வி.வி.பேட் மூலம் வெளியாகிற எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதை காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன. ஆனால், தேர்தல் ஆணையம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 வி.வி.பேட் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சராசரியாக எண்ணி, அதில் எந்த வேறுபாடும் இல்லை என்று பதில் கூறிவிட்டது. இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்மூலம் தேர்தல் நடைமுறைக்கே மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வி.வி.பேட் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்திருந்தால் தேர்தல் நடந்ததில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், தில்லு முல்லுகள் அம்பலமாகியிருக்கும். அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதன் மூலம் பா.ஜ.க.வின் சர்வாதிகார ஆட்சிக்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கிறது.
இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பதற்காகத் தான் தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் ஆணையர்களின் தேர்வு, கடந்த காலங்களில் பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது நீதிபதி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ஆகியோரை கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரிலேயே தேர்வு செய்யப்பட்டது. ஆனால், சமீபத்தில் பிரதமர் மோடி ஆட்சியில் செய்த திருத்தத்தின்படி, மூவர் தேர்வுக் குழுவில் தலைமை நீதிபதியை அகற்றி விட்டு ஒன்றிய அமைச்சரை குழுவில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் மூன்றில் இரண்டு பேர் பெரும்பான்மை என்ற அடிப்படையில் எதிர்கட்சித் தலைவரின் பரிந்துரை புறக்கணிக்கப்பட்டு, பிரதமர் மோடி யாரை விரும்புகிறாரோ, அவரைத் தான் தலைமை தேர்தல் ஆணையராகவோ, ஆணையர்களாகவோ நியமிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.
இந்நிலை தேர்தல் ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய ஆபத்து, பெரும் கேடு என்று தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். அதையெல்லாம் புறக்கணித்த காரணத்தினால் இன்றைக்கு தேர்தல் ஆணையமே பிரதமர் மோடியின் கைப்பாவையாக மாறி விட்டது. இதை விட 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வேறு எதுவும் இருக்க முடியாது. இத்தகைய ஜனநாயக கொடுமையை எதிர்த்து போராட வேண்டிய அவசியம் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயகம் செழிக்க வேண்டுமென்றால், தேர்தல் ஆணையம் நேர்மையாக, பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டும். அத்தகைய சூழல் ஏற்படுவதன் மூலமே இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படும்’ என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்