கடலூர்: விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி-கடலூர் சிதம்பரம் வழியாக நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையில் சில இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள கொத்தட்டை பகுதியில் டோல்கேட் நிறுவப்பட்டது. இது இன்று முதல் செயல்படும் என்றும், கார், பேருந்து, வேன் ஆகிய வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது.
வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும், அரசியல் கட்சியினர் கடலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து போராட்டம் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று (டிச.23) டோல்கேட் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இன்று (டிச.23) காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் டோல்கேட் பகுதியில் திரண்டனர். இவர்கள் அனைவரும் டோல்கேட் பகுதியில் தரையில் அமர்ந்து கோரிக்கை குறித்து முழக்கங்கள் எழுப்பினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ரமேஷ் பாபு, ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிதம்பரம் டிஎஸ்பி லா மேட் தலைமையிலான போலீசார் பாதுகாப்புப் படை ஈடுபட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார். இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சிதம்பரம் சார் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அங்கு கோரிக்கைகள் குறித்து குறித்து மனு அளித்தனர். கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தரப்பட்டது.
முன்னதாக சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் கடலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கலந்து கொண்டு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் கூறப்பட்டது.