புதுச்சேரியில் 10 நாட்கள் நடைபெற்று வந்த தேசிய புத்தக கண்காட்சி நிறைவு


புதுச்சேரி: புதுச்சேரி எழுத்தாளர் புத்தக சங்கம் சார்பில், வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்ற 28-வது தேசிய புத்தக கண்காட்சியை கடந்த 13ம் தேதி முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் புதுச்சேரி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 புத்தக வெளியீட்டு மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், பல்வேறு மொழிகளில், புத்தகங்கள் பார்வையிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டு இருந்தன. புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்களுக்கும், இந்து தமிழ் திசை நாளிதழ் நூல்களுக்கும் தனித் தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. விற்பனை செய்யப்பட்ட புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டது.

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த இந்த புத்தக கண்காட்சி இன்றுடன் முடிவடைந்தது. மாலையில் நிறைவு விழா நடைபெற்றது. இதில் புத்தகக் கண்காட்சி குழு சிறப்புத் தலைவர் பாஞ். ராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் முருகையன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லட்சுமிதத்தை வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சட்ட வினாடி, வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: முன்பு நமக்கு புத்தகத்தை படிப்பதுதான் ஒரே வழியாக இருந்தது. ஆனால் இன்று தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் காரணமாக புத்தகத்தை படிக்கின்றார்களா? என்றால் இல்லை. செல்போனில் செலவிடும் நேரம் அதிகரித்துள்ளதே தவிர, புத்தகங்களை படிக்கின்ற நேரம் குறைந்துள்ளது. நம்முடைய அறிவை வளர்த்துக் கொள்ள புத்தகங்கள் பேருதவியாக இருக்கின்றன. இன்றைக்கு நீட், கியூட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள் வந்துவிட்டன.

இந்த போட்டித் தேர்வுகளில் வெற்றிப்பெற வேண்டும் என்றால் பொது அறிவு போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. புத்தகங்களை படிப்பதன் மூலமாக நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வதோடு, நல்ல கல்வியாளராக, சிறந்த அறிவாளர்களாக விளங்க புத்தகங்கள் இருக்கின்றன. பாடபுத்தகங்கள் மட்டுமின்றி பல்வேறு புத்தகங்கள் இருக்கின்றன.

சங்க இலக்கியங்கள், பழங்கதைகள், பொது அறிவு கதைகள் என பல்வேறு புத்தகங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் படிக்க வேண்டும். முன்னோர்களின் வாழ்க்கை முறை உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் இந்த புத்தக கண்காட்சியை நடத்தி வருகின்றார்கள். ஆண்டுதோறும் புதிய பொலிவுபெற்று வருகிறது.

வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது சகஜம். தோல்வி அடைந்ததால் மனம் வருந்துவதைவிட, அடுத்த முறை வெற்றி பெற எந்தெந்த முயற்சிகளை கையாள வேண்டும் என்பதை ஆராய்ந்து வெற்றி பெற வேண்டும். அப்போது தான் அதற்கு தனித் தன்மை இருக்கும்.

முயற்சி செய்யாமல் எந்த வெற்றியும் கிடைக்காது. எனவே முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றவர்கள் மேலும் திறமையை வளர்த்து அடுத்த முறையும் அதனை தக்க வைத்துக்கொள்ளவது அரிதானதாகும். ஆகவே தொடர்ந்து வெற்றி பெற உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1,000-க்கு புத்தகம் வாங்கியவர்களுக்கு புத்தக நட்சத்திரம் சான்றிதழும், ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமாக புத்தகம் வாங்கியவர்களுக்கு புத்தக சிறந்த நட்சத்திரம் சான்றிதழும் வழங்கப்பட்டது.

x