மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான அரசாணையை, அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்.
தமிழ் வளர்ச்சி துறையால் தமிழ் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 188 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ.15.32 கோடி நூலுரிமைத் தொகை தமிழக அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மட்டும் 139 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ.9.71 கோடி நூலுரிமை தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு இதுவரை 31 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ.3.75 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மு.கருணாநிதி நூல்கள் அனைத்தும் நூலுரிமை தொகையின்றி நாட்டுடைமை செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி, கருணாநிதியின் அனைத்து படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான க.ராஜாத்தி அம்மாளிடம், கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கியதற்கான அரசாணையினை அவரது இல்லத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேற்று வழங்கினார். திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன், தமிழ் வளர்ச்சி துறையின் இயக்குநர் ஔவை அருள் ஆகியோர் உடனிருந்தனர்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்களை நாட்டுமையாக்குவதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். அதன்படி, அரசாணை வெளியிடப்பட்டது. கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம் அரசின் சார்பில் அரசாணையை ஒப்படைத்தோம். கருணாநிதி பல்வேறு படைப்புகளை தந்தவர். பள்ளிப்பருவத்தில் எழுதத் துவங்கி “மாணவன் நேசன்” என்கின்ற பத்திரிகை கையேடை தொடங்கி, அதிலிருந்து முரசொலியில் உடன்பிறப்பிற்கான பல்லாயிரக்கணக்கான கடிதங்களை எழுதி இடையில் குறளோவியம், நெஞ்சுக்கு நீதி, சங்கத் தமிழ் போன்ற படைப்புகளை தந்தவர். திரையுலகிலும் முத்திரை பதித்தவர். அவருடைய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுவதற்கு நூலூரிமைத் தொகை வேண்டாம் என்று கருணாநிதி குடும்பத்தினர் தெரிவித்தனர். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்’’ என்றார்.