போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவும்: 2025 ஜனவரி 9-ல் சிஐடியு தர்ணா


சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஜனவரி.9ம் தேதி தர்ணா நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: "தமிழகத்தில் பிற பொதுத்துறை நிறுவனங்களை ஒப்பிடும்போது, சேவைத்துறையாக இயங்கும் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. அவர்களில் ஓய்வூதியர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ஓய்வு பெறும்போது பணப் பலன்கள் வழங்கப்படுவதில்லை. ஓய்வூதியர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வு நிலுவையில் உள்ளது.

இதை வழங்க உயர்நீதிமன்ற கிளை முதல் உச்சநீதிமன்றம் வரை உத்தரவிட்டபோதும், தொடர்ந்து மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தப் படுகிறது. தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தவில்லை. 15-வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தர ராஜன் தலைமையில் சென்னை, பல்லவன் சாலையில் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு தர்ணா நடைபெறும். அரசு விரைந்து கோரிக்கைகளை பரீசிலிக்க வேண்டும்" என்று ஆறுமுகநயினார் கூறியுள்ளார்.

x