காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம்


கோப்புப் படம்

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு வடகிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். வரும் 25, 26-ம் தேதிகளில் சில இடங்களிலும், 27-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை நேரத்தில் சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

டிச. 21-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சிந்தியூரில் 8 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடியாறு அணை, ஊத்து, கன்னியாகுமரி மாவட்டம் பாலமோர், திருச்சி மாவட்டம் நந்தியாறு ஆகிய இடங்களில் 7 செ.மீ., திருச்சி மாவட்டம் சிறுகமணி, வத்தலை அணைக்கட்டு, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வட தமிழக கடலோரப் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x