சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழக ஆளுநர் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்ழகங்களுக்கு யுஜிசி பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுக்களை அமைத்தது, யுஜிசி விதிமுறைகளுக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கும் முரணானது. எனவே அந்த தேடுதல் குழுக்களை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசை ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தி இருந்தார்.
ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கை: துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியைச் சேர்ப்பது ஆளுநரின் உள்நோக்கமாக உள்ளது. மாநில அரசால் ஏற்கெனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் உள்ள சரத்துகளுக்கு உட்பட்டே யுஜிசி நெறிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அப்போதே தேடுதல் குழு அமைக்க சார்ந்த பல்கலைக்கழக சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என தெளிவாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படியே தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
யுஜிசி நெறிமுறைகள் பரிந்துரை மட்டுமே. அதை அப்படியே கட்டாயம் மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்பது அரசுக்கு அரசியல் உள்நோக்கோடு கொடுக்கும் நெருக்கடி ஆகும். பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் தேவையற்ற வகையில் மூக்கை நுழைப்பது போன்ற ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் ஏற்கெனவே பலமுறை குட்டுவைத்தும் அவர் தனது செய்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை.
நிதி ஒதுக்கீடு செய்யாமல் பல்கலைக்கழகங்களை முடக்கும் மத்திய அரசின் செயல்பாட்டை மறைக்கவே ஆளுநர் இப்படி அரசியல் செய்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
நிர்வாகக் குளறுபடிகளுக்கு காரணமான தனது செயல்களை ஆளுநர் இனியாவது நிறுத்தி, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை அளிக்க முன்வரவேண்டும். யுஜிசி பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் ஆளுநர், முடிந்தால் யுஜிசியிடம் அதிக நிதியை தமிழக பல்கலைக்கழ கங்களுக்கு பெற்றுத் தரலாமே.
மொழி உரிமை, கல்வி உரிமை போராட்டங்களைக் கண்ட தமிழகத்தில் ஆளுநர் தனது அரசியலைக் கைவிட வேண்டும். துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தை தமிழக அரசு சட்டரீதியாக எதிர்கொள்ளும்.