வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கடந்த காலத்தைபோல ஆளுநர் நடக்க மாட்டார்: அமைச்சர் எஸ்.ரகுபதி


புதுக்கோட்டை: கடந்த காலத்தில் நடந்துகொண்டதுபோல, வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் ரவி நடந்துகொள்ள மாட்டார் என்று நம்புகிறோம் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்கள், குற்றப் பின்னணி உள்ளவர்களை கட்சியில் சேர்த்துக் கொள்வதும், அவர்களுக்கு பதவிகள் கொடுப்பதும் பாஜகதான். வேறு எந்த கட்சியும் அதுபோல நடந்து கொள்வது கிடையாது.

நாடாளுமன்றத்தில் அம்பேத்கரைப் பற்றி மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியது தொடர்பாக தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்க முடியாத முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துதான் தனது கருத்து என்று கூறியுள்ளார். இப்படி கூறுவதற்கு அவருக்கு எதற்கு பொதுச் செயலாளர் பதவி?

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் 3 பேரைத்தான் சேர்க்க முடியும். ஆளுநர் கூறுவதைப்போல யுஜிசியில் இருந்து ஒருவரை நியமிக்க முடியாது. ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே வார்த்தை மோதல் இருப்பது இயற்கைதான். அவர் மாறிவிட்டார் என்று கருதி, நாங்கள் அவர் கொடுத்திருந்த தேநீர் விருந்துக்குச் செல்லவில்லை. அரசு சார்பில் வந்த அழைப்பை ஏற்று, அமைச்சர்கள் சிலருடன் முதல்வர் அதில் கலந்துகொண்டார்.

வரும் ஜனவரி 6-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஆளுநரின் செயல்பாடு கடந் தகாலத்தைப்போல இருக்காது என்று நம்புகிறோம். அப்படி இருந்தால், பின்விளைவுகளைப் பற்றி அப்போது கூறுவோம்.

நெல்லை கொலை சம்பவத்தில் காவல் துறை விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்துள்ளது. எனவே, காவல் துறையைப் பாராட்ட வேண்டுமே தவிர, குறைகூறுவது சரியல்ல. நீதிமன்ற வளாகத்துக்கும் வெளியே நடந்த சம்பவத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல.

சட்டப்பேரவைத் தேர்தலில் 2 கட்சி போட்டிதான் இருக்கும். 3-வதாக ஒரு அணி பங்கேற்கலாம். ஆனால், நிச்சயம் இரு அணிகளுக்கு இடையேதான் போட்டி இருக்கும். தமிழகத்தில் மற்ற கட்சிகளைக் காட்டிலும் திமுகவுக்கு மக்கள் மத்தியில் கூடுதல் மரியாதை உண்டு.

எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடப்பது எங்களுக்கு வலிமைதான். ஆனால், ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் முதல்வர் ஸ்டாலின் விரும்புவார். தகுதியே இல்லாத ஆட்களோடு போட்டியிட அவர் விரும்ப மாட்டார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

x