“புகழ்பாடும் மன்றமாக சட்டப்பேரவை மாறியுள்ளது” - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு


வானதி சீனிவாசன் | கோப்புப்படம்

கோவை: “தமிழக சட்டப்பேரவை புகழ்பாடும் மன்றமாக மாறியுள்ளது” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று(டிச.21) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தை இரண்டு நாட்கள் மட்டுமே நடத்திவிட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்திய பாஜக கூட்டணி அரசின் மீது பழி சுமத்திய தமிழக முதல்வருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் முதல் நாளில் இருந்து தொழிலதிபர் அதானி விவகாரத்தை கிளப்பி, அவையை ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் முடக்கின.

அம்பேத்கரின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றும் கட்சிகளை அம்பலப்படுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இதை திசை திருப்பி கடைசியில் சில நாட்கள் அவையை முடக்கினர். தமிழக சட்டப்பேரவையில் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் பாராட்டிப் பேசினால் மட்டுமே தொடர்ந்து பேச முடியும்.

ஜனநாயகத்தை புறந்தள்ளி தந்தை, மகன், பேரன் ஆகியோரின் புகழ்பாடும் மன்றமாக, தமிழக சட்டப்பேரவையை மாற்றியவர்கள், ஜனநாயகத்தை மதித்து, அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்பளித்து நாடாளுமன்றத்தை நடத்தும் பாஜகவை குறை சொல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

x