மேட்டூர் அனல்மின் நிலைய மின் உற்பத்தி பெரும் சரிவு - 180 மெகாவாட் மட்டுமே உற்பத்தி! 


மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நடந்த விபத்து காரணமாக மின் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தற்போது 180 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் 3-வது அலகில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதனால் 3-வது அலகில் முழுமையாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பணியாளர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, 3-வது அலகில் இருந்து 4-வது அலகுக்கு செல்லும் குடிநீர் குழாய், ஆயில் குழாய் உள்ளிட்டவை உடைந்துள்ளது. இதன் காரணமாக 4-வது அலகிலும் மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், 2-வது அலகில் 45 நாட்கள் பராமரிப்பு பணி நடந்து வருவதாலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் முதல் பிரிவின் முதல் அலகில் மட்டும் 180 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது.

அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் திறன் கொண்ட 2-வது பிரிவில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொதிகலன் டியூப் வெடித்தன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர், ஊழியர்கள் சரி செய்த பிறகே கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்நிலையில் 600 மெகாவாட் திறன் கொண்ட 2-வது பிரிவில் இன்று (டிச.21) காலை கொதிகலன் டியூப் வெடித்ததையடுத்து மீண்டும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒட்டுமொத்தமாக 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் நிலையில், 180 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, அனல் மின் நிலையத்தில் 87 சதவீதம் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 சதவீதம் மட்டுமே நடந்து வருகிறது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் டிச.19 மாலை நிலக்கரி பங்கர் சரிந்து விழுந்ததால் அந்த இடத்தில் பணி செய்து கொண்டிருந்த 7 ஒப்பந்தத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இந்த விபத்தில் சிக்கிய வெங்கடேசன் மற்றும் பழனிசாமி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

x