மழையில் சேதமடைந்த வீட்டை புதுப்பிக்கும் பணியை தொடங்கிய பெண்ணுக்கு வருவாய் துறை நோட்டீஸ்: ஆக்கிரமிப்பு நிலம் என்று கூறியதால் வாக்குவாதம்


கோப்புப் படம்

சென்னை: திருக்​கழுகுன்​றத்தை அடுத்த ருத்ரன் கோட்டி கிராமத்​தில் சேதமடைந்த குடி​யிருப்பை சீரமைக்​கும் பணிகளை மேற்கொண்ட பெண்​ணுக்கு, அரசு நிலம் எனக்கூறி வருவாய் துறை சார்பில் நோட்​டீஸ் வழங்​கப்பட்டுள்ளது. செங்​கல்​பட்டு மாவட்டம், திருக்​கழுகுன்றம் பேரூராட்​சிக்கு உட்பட்ட ருத்ரன் கோட்டி பகுதி​யில் அரசுக்கு சொந்​தமான கல்லாங்​குத்து நிலம் சர்வே எண் 70-ல் உள்ள 2 சென்ட் நிலத்​தில், லதா என்பவர் சிறிய வீட்​டில் கடந்த 35 ஆண்டு​களுக்​கும் மேலாக வசித்து வருவதாக தெரி​கிறது.

இதேபோல், அப்பகு​தி​யில் 50-க்​கும் மேற்​பட்ட குடி​யிருப்புகள் மற்றும் கடைகள் அமைந்​துள்ளன. இந்நிலை​யில், கனமழை மற்றும் ஆண்டுகள் பல கடந்​ததன் காரணமாக குடி​யிருப்பு சேதமடைந்​ததாக கூறப்​படு​கிறது. இதனால், லதா, புதிய குடி​யிருப்பு அமைப்​ப​தற்கான கட்டுமான பணிகளை கடந்த சில நாட்​களுக்கு முன் தொடங்​கி​யுள்​ளார்.

இந்நிலை​யில், மேற்​கண்ட நிலம் அரசுக்கு சொந்​த​மானது என தெரி​வித்து, வருவாய் துறை சார்​பில் கடந்த 14-ம் தேதி நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டுள்​ளது. இதன் காரணமாக தனது வாழ்​வா​தாரம் பாதிக்​கப்​பட்​டுள்ளதாக கூறி லதா வருவாய்த் துறை உயர் அதிகாரி​களிடம் மனுக்களை வழங்​கி​யுள்​ளார்.

மேலும், நோட்​டீஸ் தொடர்பாக நேற்று கிராம நிர்வாக அலுவல​கத்​தில் அப்பெண் வாக்கு​வாதத்​தில் ஈடுபட்டு, தனது வாழ்​வா​தாரம் பாதிக்​கப்​பட்​டுள்ள​தாக​வும், அதனால், பிள்​ளை​களுடன் தற்கொலை செய்​து​கொள்​ளப்​போவ​தாக​வும் தெரி​வித்​தார். இதனால், அப்பகு​தி​யில் பரபரப்பு ஏற்பட்​டது.

இதுகுறித்து, பாதிக்​கப்​பட்ட பெண் லதா கூறிய​தாவது: என் தந்தை​யுடன் கடந்த பல ஆண்டு​களாக வசித்து வரும் நிலை​யில், எனது வீட்டுக்கு மட்டும் நோட்​டீஸ் வழங்​கி​யுள்​ளனர். அரசு நிலத்தை மீட்க வேண்​டும் என்றால், என்னை போல் அப்பகு​தி​யில் வசிக்​கும் 50-க்​கும் மேற்​பட்ட குடி​யிருப்பு​களுக்கு நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டிருக்கும். ஆனால், எனது குடி​யிருப்​புக்கு மட்டும் நோட்​டீஸ் வழங்​கி​யுள்ள​தால், கட்டுமான பணிகளை மேற்​கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, சாலை​யில் வசிக்​கும் அவல நிலைக்கு தள்ளப்​பட்​டுள்​ளேன் என்றார்.

இதுகுறித்து, ருத்ரன் கோட்டி கிராமத்​தின் வருவாய் ஆய்வாளர் கூறிய​தாவது: பாதிக்கப்பட்டுள்ள பெண் அதுதொடர்​பான, ஆவணங்​களு​டன் ​முறையாக ப​தில் மனு வழங்​கி​யுள்​ளார். அத​னால், அவரது கோரிக்கையை பரிசீலிக்​கு​மாறு வட்​டாட்​சி​யருக்கு பரிந்​துரை செய்​துள்ளோம் என்​றார்​.

x