சென்னை: சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் எண்ணூர் - அத்திப்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் வழித்தடத்தில் உயர் மின்னழுத்த கம்பி நேற்று காலை 7.50 மணிக்கு திடீரென அறுந்து விழுந்தது. இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டது. அவ்வழியாக செல்லும் மின்சார மற்றும் விரைவு ரயில்கள் எண்ணூர் ரயில் நிலையம் அருகே ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்து ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காலை 10.25 மணிக்கு சரி செய்தனர். இதையடுத்து, ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இந்த சம்பவம் காரணமாக, இரண்டரை மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால், காலை நேரத்தில் வேலைக்கு சென்ற ஊழியர்கள், மாணவர்கள், வெளியூர் சென்ற பயணிகள் உள்ளிட்டோர் கடும் சிரமத்துக்கு ஆளாயினர்.