பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 193 கிலோ தங்க நகைகள் வங்கியில் ஒப்படைப்பு


பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 193 கிலோ தங்க நகைகளை வங்கி அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மாலா. உடன், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அர.சக்கரபாணி உள்ளிட்டோர்.

தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த 193 கிலோ தங்க நகைகள் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது, கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்களில் கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய பொன் இனங்களை மும்பையில் உள்ள ஆலையில் உருக்கி சொக்கத் தங்கமாக மாற்றி, கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருந்தார்.

அதன்படி, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த 192 கிலோ 984 கிராம் தங்கத்தை, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மாலா முன்னிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் திவ்ய தேஜாவிடம் அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று ஒப்படைத்தார்.

இவற்றை மும்பையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சுத்த தங்கக் கட்டிகளாக பெற்று, அவை பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். அதன் மூலம் கிடைக்கப் பெறும் வருவாய், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, பழநி எம்எல்ஏ செந்தில்குமார், அறநிலையத் துறைச் செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சுகுமார், பழநி கோயில் தக்கார் கார்த்திக், இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

x