புதுக்கோட்டை: ஒப்பந்த முறையில் சமையல் உதவியாளர் பணி நியமனத்துக்கு எதிராக டிச.23-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மலர்விழி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் இன்று (டிச.20) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களுக்கான தொகுப்பூதிய முறையை கைவிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி சத்துணவு ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் அதிமுக ஆட்சியின்போது போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது. அதில், பங்கேற்று பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், திமுக அரசு அமைந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்தார்.
ஆட்சி மாறினாலும் கோரிக்கை நிறைவேறவில்லை. இதையடுத்து, தமிழகம் முழுவதும் தொடர் உண்ணாவிரத போராட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்டது. அதில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் உத்தரவாதம் அளித்தார். ஆனாலும் கோரிக்கை நிறைவேறவில்லை.
இந்நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 145 சமையல் உதவியாளர் காலிப்பணியிடம் உள்ள நிலையில், ஒப்பந்த ஊதியத்தில் 9 ஆயிரம் பணியிடத்தை நிரப்புவதற்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்புவதற்கு அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அரசு அளித்த வாக்குறுதிப்படி ஒப்பந்த ஊதிய முறையைக் கைவிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி டிச.23-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அடுத்த வாரம் நடைபெற உள்ள மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்படும் என்றார்.