சென்னை: தமிழகத்தில் முடிதிருத்துவதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் கரோனா பேரிடரை ஒட்டி 4 ஆண்டுகள் முடிதிருத்தும் கட்டணம் உயர்த்தப் படாத நிலையில், கடை வாடகை, மின் கட்டணம் உள்ளிட்டவற்றின் உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் முடிதிருத்துதல் உள்ளிட்டவற்றுக்கான குறைந்தபட்ச கட்டணத்தில் ரூ.10 உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மாநிலத் தலைவர் ப.நடராஜன் பாரதிதாஸ் கூறும்போது, "முடிதிருத்தும் நிலையம் வைத்துள்ள கார்ப்பரேட் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் சேவிங் ரூ.49, கட்டிங் ரூ.99 என கட்டணம் நிர்ணயித்து சாதாரண தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படுகின்றனர். அவர்களும் கட்டணத்தை உயர்த்த வேண்டும்
திருத்தப்பட்ட விலை பட்டியலின்படி, சேவிங் ரூ.60, கட்டிங் ரூ.120, கட்டிங், சேவிங் ரூ.180, சிறுவர் கட்டிங் ரூ.100 என்பதை குறைந்தபட்ச கட்டணமாக வசூலிக்க வேண்டும். இதில் இருந்து ரூ.10 அதிகரித்து ஏசி உள்ள கடைகள் வசூலித்துக் கொள்ளலாம்" என்றார்.