புதுச்சேரி: அரசியலில் அனைவரும் பங்கேற்க உரிமையுள்ளது. புதுச்சேரி சேவை செய்வோர் யாராக இருந்தாலும் வரவேற்போம். மூடியுள்ள ஏஎப்டி மில்லை தன்னிடம் தந்தால் நடத்துவேன் என்று ஜோஸ் சார்லஸ் மார்டின் கூறிய துணிச்சலை வரவேற்கிறேன் என்று பாஜக அமைச்சர் சாய் சரவணன் குமார் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரும், பாஜக ஆதரவு சுயேட்சைகள் மூன்று பேரும் தனி கோஷ்டியாக செயல்படுகின்றனர். இந்நிலையில் பொருளாதார குற்றம் புரிந்தோர் புதுச்சேரி அரசியலில் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கின்றனர். புதுச்சேரியில் லாட்டரியை கொண்டு வர முயற்சிக்கின்றனர் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் சாய் சரவணன் குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது, “புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்தை செய்திதாளில் பார்த்தேன். அரசியலில் அனைவரும் பங்கேற்க உரிமை உள்ளது. எத்தொழிலதிபரும் அரசியல் செய்யலாம். ஜோஸ் மார்டின் புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்வதை வரவேற்கிறோம். அரசியல்வாதி போர் வீரன் போன்றவன். எந்த நேரத்தில் பதவி முடியும் என தெரியாது. மக்கள் சேவை செய்தால்தான் அந்த பணி தொடரும். தொகுதி வளர்ச்சிக்கு கேட்டு வாங்குவது தார்மீக கடமை. புதுச்சேரிக்கு சேவை செய்வோர் யாராக இருந்தாலும் வரவேற்போம்.
முதல்வருக்கு எதிராக அவர் (ஜோஸ் மார்டின்) தெரிவித்த கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை, மூடிய ஏஎப்டி மில்லை தன்னிடம் தந்தால் நடத்துவேன் என அவர் துணிச்சலை வரவேற்கிறோம். நான் அரசின் அனைத்து நிறுவனங்களையும் அவரிடம் தர சொல்லவில்லை. அரசு செயல்படுத்த முடியாததை தனியாரிடம் தரலாம். புதுச்சேரியிலுள்ள மக்களுக்கு நலத்திட்டம் செய்தால், அதை மக்களுக்கு நாங்கள் கொண்டு செல்வது தவறில்லை. மக்களுக்கு தேவையான நலத்திட்ட பொருட்களை தந்தால் எனது கட்சி உரிமை பெற்று நான் வாங்கி தருவேன். தந்தையாக இருந்தாலும் மகனாக இருந்தாலும் உரிமையை கேட்டு பெறலாம். சாத்தான் வேதம் ஓத வேண்டாம்" என்று சாய் சரவணன் குமார் கூறினார்.