புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளி மாநில மக்கள் உள்ளே வர இ-பாஸ் முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது; ”புதுச்சேரியின் சட்டப்பேரவை தலைவர் செல்வம், பேரவை மாண்புகளையும், மரபுகளையும் மீறி செயல்பட்டு வருகிறார். அனைத்து அரசு விழாக்களிலும் தான் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதும், எஸ்டிமேட் மற்றும் பொது கணக்கு குழுவில் உறுப்பினராக கூட இல்லாத நிலையில் அந்த கமிட்டியின் தலைவர்களின் அதிகாரத்தை குறைக்கின்ற விதத்தில் தானே அந்த கமிட்டிக்கு தலைமை தாங்கி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு சட்டத்துக்கு எதிரான வரம்பு மீறிய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இது சம்பந்தமாக சுயேச்சை எம்எல்ஏ நேரு, சட்டப்பேரவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டுமென கடிதம் அளித்துள்ளார். இது சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை பேரவைத் தலைவர் செல்வம் உணர வேண்டும். யூனியன் பிரதேச சட்டம் 1963, யூனியன் பிரதேச பிசினஸ் ரூல் படி எந்த ஒரு இடத்திலும் துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆகியோர் கலந்துகொள்ளும் அரசு விழாக்களில் பேரவைத் தலைவர் கலந்துகொள்ளலாம் என இல்லை.
உச்ச நீதிமன்றம் கூட எனது அதிகாரத்தில் தலையிட முடியாது என பேரவைத் தலைவர் கூறியுள்ளது மாநிலத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நீதித் துறையையே சட்டப்பேரவைத் தலைவர் கேலி செய்துள்ளது தவறான ஒன்று. முதல்வர் மற்றும் துணை நிலை ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் கலந்து கொள்ளலாம் என சட்டப்பேரவை விதிகளில் இருக்கிறதா என்று பேரவைத் தலைவர் தெரிவிக்க வேண்டும். அவருக்கு நான் சவாலாகவே இதை கூறிக் கொள்கிறேன். அவர் அதற்கான ஆதாரத்தை தெரிவிக்க வேண்டும்.
மேலும் எனது அதிகாரத்தில் உச்ச நீதிமன்றமே தலையிட முடியாது என கூறுவது பேரவைத் தலைவரின் ஆணவத்தின் உச்சகட்டம். உச்ச நீதிமன்றத்தையே சட்டப்பேரவை தலைவர் கலங்கப்படுத்தியுள்ளார். இது கண்டிக்கதக்க ஒன்றாகும். முதல்வர் அறையில் அவ்வப்போது சட்டப்பேரவை தலைவர் அமர்ந்து அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு முதல்வர் அழைத்து தான் நான் செல்கிறேன் என தெரிவித்துள்ளார். அவ்வப்போது சட்டப்பேரவை தலைவரை அழைப்பது குறித்து முதல்வர் பதிலளிக்க வேண்டும்.
புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி நோக்கி அதிக அளவில் வெளி மாநில மக்கள் உள்ளே வர இருப்பதால் இ-பாஸ் முறையை புதுச்சேரி அரசு கொண்டுவர வேண்டும். ஆயிரம் கார்கள் மட்டுமே நிறுத்த இடமுள்ள நகர பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வருகை தருவதால் புதுச்சேரி நகரமே போக்குவரத்து நெரிசலினால் அல்லல்படுகிறது. எனவே துணை நிலை ஆளுநர், முதல்வர், காவல்துறை தலைவரை அழைத்து பேசி இ-பாஸ் முறையை கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்பழகன் கூறியுள்ளார்.