சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு விசாரணை ஜன.27-க்கு ஒத்திவைப்பு: நீதிமன்றம் அதிரடி


சென்னை: சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு விசாரணையை ஜன.27-க்கு ஒத்திவைப்பதாக மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக, கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கடந்த மே மாதம் 4ம் தேதி அதிகாலை கைது செய்தனர்.

இந்நிலையில், தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த போது, கஞ்சா வைத்திருந்ததாக பழனிசெட்டிபட்டி போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவரிடமிருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் சவுக்கு சங்கருக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் சவுங்கு சங்கரை தேனி போலீசார் மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமல செல்வன் முன்பாக ஆஜர்படுத்தினர். அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் பிடியாணையை ரத்து செய்ய கோரிய மனுவை ஏற்க மறுத்து டிசம்பர் 20ம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இன்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது கஞ்சா வைத்திருந்த வழக்கு விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் நிர்வாக காரணங்களுக்காக யூடியுபர் சவுக்கு சங்கரின் பிரதான வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வுக்கு மாற்றம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கரின் ஜாமீன் வழக்கில் மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார்.

x