மதுரை: மின் கம்பம், கரண்ட் இருக்கிறது, மோட்டார் ஓடுகிறது, ஆனால் சர்வீஸ் நம்பர் இல்லை. மானியத்தில் நீர்மூழ்கி மோட்டார் பெறுவதற்கு 2 ஆண்டாக அலைகிறேன், தர மறுக்கிறார்கள் என பெண் விவசாயி, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குமுறினார். இதனைக் கேட்ட ஆட்சியர், அவரது ஆவணத்தை வைத்து சர்வீஸ் நம்பரை கண்டுபிடித்து தாருங்கள் என மின்வாரிய அதிகாரியை கண்டித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ், நீர்வளத் துறை கோட்ட செயற் பொறியாளர் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாயிகள் பங்கேற்று தங்களை கோரிக்கைகளை ஆட்சியரிடம் முன் வைத்தனர்.
அதற்கு அரசுத் துறை அதிகாரிகள் பதிலளித்த விவரம்:
விவசாயி பாண்டியம்மாள் (கருமாத்தூர் ஒத்தப்பட்டி): அரசு வழங்கிய இலவச கரண்ட் இருக்கு, தினமும் 3 எச்.பி மோட்டார் ஓடுகிறது. ஆனால் மின் இணைப்பு எண் கேட்டால் தரமறுக்கிறார்கள். வேளாண்மைத் துறை வழங்கும் நீர் மூழ்கி மோட்டாருக்கு மானியத்தில் பெற விண்ணப்பித்தேன். அப்போது மின் இணைப்பு எண் கேட்டார்கள். மின் இணைப்பு எண் கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் 2 ஆண்டாக அலைகிறேன். இதுவரை தரவில்லை. எல்லா ஆவணங்களை கொடுத்தும் 2 ஆண்டாக தர மறுக்கிறார்கள்.
ஆட்சியர்: ஏன் 2 ஆண்டாக மின் இணைப்பு கண்டுபிடித்து தரவில்லை.
மின்வாரிய அதிகாரி: ஆவணங்கள் இருந்தால்தான் இணைப்பு எண் வழங்க முடியும்.
ஆட்சியர்: மின் கம்பம், இணைப்பு இருக்கிறது. மோட்டார் ஓடுகிறது என்கிறார். ஏன் சர்வீஸ் நம்பர் வழங்கவில்லை. உங்களிடம் உள்ள ஆவணங்களை வைத்து சர்வீஸ் நம்பர் கண்டுபிடித்து கொடுங்கள். அந்த விவசாயியிடம் ஆவணங்கள் இல்லை என்கிறார்.
மின்வாரிய அதிகாரி: ஏதாவது ஒரு ஆவணங்களை கொண்டுவரச் சொல்லுங்கள்.
ஆட்சியர்: நீங்கள் ‘ஓவராக’ பேசுகிறீர்கள். ஆவணங்கள் இல்லாதபோது உங்களிடம் உள்ள ஆவணங்களை வைத்து எண்ணை கண்டுபிடித்து கொடுங்கள். இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா?. சர்வீஸ் எண் இல்லையென்றால் எப்படி மின் இணைப்பு கொடுத்தீர்கள். அப்போது ‘இல்லீகலா’ (சட்ட விரோதமாக) கொடுத்ததற்காக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கலாமா?.
எதற்கெடுத்தாலும் எதிர்த்து பேசாமல் அவருக்கு சர்வீஸ் எண்ணை கண்டுபிடித்துக் கொடுங்கள். அப்போது, சமயநல்லூர் பகுதி விவசாயிகள், விளைச்சல் இல்லாத நெற்பயிர்களுடன் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கிற்குள் நுழைய முயன்றபோது போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் விவசாயிகள் கோரிக்கையின்படி உள்ளே அனுமதித்தனர்.
பின்னர் ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். 150 நாள் நெற்பயிர்கள். நெற்கதிர்கள் விளையும் தருணத்தில் விளைச்சலின்றி பாதித்துள்ளது. இதனால் சமயநல்லூர் பகுதியில் பல நூறு ஏக்கர் விவசாயம் பாதித்துள்ளது. எனவே, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியர்: அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.