புதுவை: இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்வு!


புதுவையில் 6 வருடங்களுக்குப் பிறகு அரசு பேருந்தின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”புதுச்சேரியில் பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.2 முதல் அதிகபட்சம் ரூ.8 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு முதல்வர் ரங்கசாமியின் அறிவிப்புக்கு பிறகு அமலுக்கு வரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்டுள்ள இந்த புதிய கட்டண விவரங்களின்படி, குளிர்சாதன வசதியில்லாத நகரப் பேருந்துகளுக்கு பயண கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5-லிருந்து ரூ.7 ஆகவும், அதிகபட்சம் ரூ.13-லிருந்து ரூ.17 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.10 லிருந்து ரூ.13 ஆகவும், அதிகபட்சமாக ரூ.26-லிருந்து ரூ.34 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதியில்லாத சொகுசு பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.12-லிருந்து ரூ.16 ஆகவும், அதிகபட்சம் ரூ.36-லிருந்து ரூ.47 ஆகவும் உயர்த்தப்படடுள்ளது. குளிர்சாதன வசதியில்லாத விரைவு பேருந்துகளுக்கு புதுச்சேரி எல்லைக்குள் கி.மீட்டருக்கு 0.75 பைசா என்பது 0.98 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 25 கி.மீட்டர் வரை ரூ.20-லிருந்த குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆக உயர்த்தப்படடுள்ளது.

புதுச்சேரி எல்லைக்குள் குளிர்சாதன விரைவுப் பேருந்துக் கட்டணம் கி.மீட்டருக்கு ரூ.1.30-லிருந்து ரூ.1.69 ஆகவும், புதுச்சேரி நகரத்திற்குள் வால்வோ பேருந்துகளுக்கான கட்டணம் கி.மீட்டருக்கு ரூ.1.70-லிருந்து ரூ.2.21 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

x