பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் தற்போது கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் அவதூறு பரப்பியதாக மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் யூ-ட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த அளித்த பேட்டியில், பெண் போலீசார் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளைத் தெரிவித்து இருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ம் தேதி அதிகாலை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில், தேனியில் தனியார் விடுதியில் அவர் தங்கியிருந்த போது, கஞ்சா வைத்திருந்ததாக பழனிசெட்டிபட்டி போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவரிடமிருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் சவுக்கு சங்கருக்கு மதுரை போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் தற்போது அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் கைது செய்யப்பட்டார். தூய்மை பணியாளர், தமிழக அரசு வெளியிட்ட திட்டம் பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.