கரூர்: லாலாபேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு தனியார் (எஸ்ஸார்) சொகுசு ஆம்னி பேருந்து நேற்றிரவு புறப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் லாலாபேட்டை ரயில்வே மேம்பாலத்தில் இரவு 1.30 மணிக்கு வந்த பேருந்து பாலத்தின் இறக்கத்தில் வந்தப் போது ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து பாலத்தின் கைப்பிடி தடுப்புச் சுவரில் மோதி பாலத்தின் குறுக்கே கவிழ்ந்தது.
இதில், பேருந்தில் 8 பயணிகளும், ஓட்டுநரும், கிளீனர் என 10 பேர் மட் டுமே பயணம் செய்துள்ளனர். இருப்பினும் யாருக்கும் பெரியளவில் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீஸார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர். விபத்து குறித்து தகவலறிந்த தனியார் ஆம்புலன்ஸ்கள் ஏராளமாக சம்பவ இடத்தில் குவிந்தனர்.
ராட்சஷ கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பேருந்தை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. பேருந்து பாலத்தின் குறுக்கே கவிழ்ந்ததில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலத்தின் மேற்கு பகுதியில் கிருஷ்ணராயபுரம் வரையும், கிழக்கு பகுதியில் திம்மாச்சிபுரம் வரை இருபுறமும் தலா 5 கி.மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் காத்து நின்றன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
பேருந்தில் வந்தவர்கள் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அந்நிறுவனத்தில் மாற்று பேருந்து மூலம் கோயம்புத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிரேன்கள் மூலம் பேருந்து அகற்றப்பட்டதை அடுத்து சுமார் 3 மணி நேரம் இரு புறமும் காத்திருந்த வாகனங்கள் புறப்பட்டு சென்றன.