அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய கோரிய மனு தள்ளுபடி


பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞரான ராம்குமார் ஆதித்தன், கோவையைச் சேர்ந்த கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அதிமுக தொண்டர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வகையில், கடந்த 2022 ம் ஆண்டு ஜூலையில் நடந்த பொதுக்குழுவில், அதிமுகவின் அடிப்படை சட்ட விதிகள் திருத்தப்பட்டது. அதன்படி அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு தலைமைக்கழக பதவி வகித்து இருக்க வேண்டும். 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுகவில் மூன்று நபர்கள் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் இதற்கு முன்பாக இருந்த விதிகளின்படி 5 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருந்தாலே பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியும். திருத்தப்பட்ட விதிகள் அதிமுக உறுப்பினர்களின் உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி சட்டவிரோதமானதும்கூட.

எனவே கட்சியின் எதிர்காலம் மற்றும் உரிமையை பாதுகாக்கும் வகையில் அதிமுகவில் திருத்தப்பட்ட விதிகளுக்கும், அதிமுக பொது்ச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரித்துள்ளதை மறுபரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கவும், வழக்கு தொடர்பான ஆவணங்களை பரிசீலிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், எனக்கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு விளம்பர நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

x