நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களில் அகற்ற வேண்டும்: கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


சென்னை: நெல்​லை​யில் கொட்​டப்​பட்ட மருத்​துவக் கழிவுகளை கேரள அரசே அகற்ற வேண்​டும் என்று பசுமைத்தீர்ப்​பாயம் உத்தர​விட்​டுள்​ளது.

கேரள மாநில மருத்​துவக் கழிவுகள் சில நாட்​களுக்கு முன் நெல்லை மாவட்​டத்​தில் கொட்​டப்​பட்டன. பசுமைத் தீர்ப்​பா​யத்​தின் தென் மண்டல அமர்​வின் கவனத்​துக்கு இந்த விவகாரத்தை அரசு வழக்​கறிஞர் கொண்டு சென்​றார். தமிழக அரசு கழிவுகளை அகற்றி, அதற்கான செலவை கேரளா​விடம் வசூலித்​துக் கொள்​ளலாம் என பசுமைத் தீர்ப்​பாயம் உத்தர​விட்​டிருந்​தது.

இந்நிலை​யில், பசுமைத் தீர்ப்​பாயம் நேற்று தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து, அமர்​வின் நீதித் துறை உறுப்​பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்​நுட்ப உறுப்​பினர் கே.சத்​யகோபால் ஆகியோர் முன்னிலை​யில் வழக்கு விசா​ரணைக்கு ஏற்றுக்​கொள்ளப்பட்​டது.

அரசுத் தரப்பு வழக்​கறிஞர் கூறும்​போது, “கேரள மருத்​துவக் கழிவுகளை தமிழகத்​தில் கொட்டுவது தொடர்​கதையாகிவிட்டது. ஏற்கெனவே நாங்​குநேரி பகுதி​யில் கொட்​டப்​பட்ட மருத்​துவக் கழிவுகளை அகற்றியதற்கான ரூ.69 ஆயிரம் தொகையை கேரள அரசு இன்னும் தரவில்லை. அதனால், தற்போது 4 கிராமங்​களில் கொட்​டப்​பட்​டுள்ள மருத்​துவக் கழிவுகளை கேரள அரசே அகற்று​மாறு அறிவுறுத்த வேண்​டும்” என்று வாதிட்​டார்.

மாசுக் கட்டுப்​பாடு வாரிய தரப்பு வழக்​கறிஞர் கூறும்​போது, “இது தொடர்பாக கேரள மாசுக் கட்டுப்​பாடு வாரி​யத்​துக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. அதில், தமிழகப் பகுதி​யில் மருத்​துவக்கழிவுகளை கொட்டிய திரு​வனந்​த​புரம் மண்டல புற்று​நோய் சிகிச்சை மையம் மற்றும் தனியார் ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். விதிகளை மீறி தமிழகத்​தில் கழிவுகள் கொட்டுவதை கண்காணிக்க வேண்​டும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது” என்றார்.

இதையடுத்து, அமர்​வின் உறுப்​பினர்கள் பிறப்​பித்த உத்தர​வில், “தற்​போது மருத்​துவக் கழிவுகள் கொட்​டப்​பட்ட பகுதி வனப் பகுதி​யாகும். இதனால் விலங்​கு​ களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, நெல்​லை​யில் கொட்​டப்​பட்ட மருத்​துவக் கழிவுகள் மற்றும் திடக் கழிவுகளை கேரள அரசு 3 நாட்​களுக்​குள் அகற்ற வேண்​டும். அது தொடர்பான அறிக்கையை, வழக்​கின் அடுத்த ​விசாரணை நாளான டிச. 23-ம் தேதி ​தாக்கல் செய்ய வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளனர்​.

இதற்​கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்​நாடு மாசுக் கட்டுப்​பாடு வாரி​யம், மத்திய மாசுக் கட்டுப்​பாடு வாரி​யத்​துக்கு எழுதி​யுள்ள கடிதத்​தில், "தமிழகத்​தில் கேரள மருத்​துவக் கழிவுகள் கொட்​டப்​படு​வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். மேலும், கேரள மாசுக் கட்டுப்​பாடு வாரி​யத்​துக்கு உரிய உத்தர​வு​களைப் பிறப்​பிக்க வேண்​டும்" என்று வலியுறுத்​தப்​பட்​டுள்​ளது.

x