பருத்தி, பாலியஸ்டர் விலை உயர்வால் ஜவுளித்தொழில் பாதிப்பு: மகாராஷ்டிரா ஆளுநரிடம் ‘ஓஸ்மா’ சங்கத்தினர் முறையீடு 


கோவை காளப்பட்டி பகுதியில்  மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை,  தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தினர்(ஓஸ்மா) இன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

கோவை: பருத்தி, பாலியஸ்டர், விஸ்கோஸ் உள்ளிட்ட செயற்கைஇழை மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஜவுளித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண உதவ வேண்டும் என கோவையில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம், தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தினர் (ஓஸ்மா) வியாழக்கிழமை (டிச.19) நேரில் மனு அளித்தனர்.

இதுகுறித்து ‘ஓஸ்மா’ தலைவர் அருள்மொழி கூறும் போது, “கோவை காளப்பட்டி பகுதியில் மகாராஷ்ட்ரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை எங்கள் அமைப்பு சார்பில் தலைவர் மற்றும் இணை செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினோம். இந்தியாவில் பாலியஸ்டர், விஸ்கோஸ் ஆகிய செயற்கைஇழை பொருட்களின் விலை உலக நாடுகளை விட ரூ.20 முதல் ரூ.25 இந்தியாவில் அதிகம் உள்ளது குறித்து தெரிவித்தோம்.

மேலும் சர்வதேச பருத்தி விலையை விட இந்திய பருத்தி விலை ரூ.14 முதல் ரூ.20 வரை அதிகம் உள்ளது. இவை முக்கிய மூலப்பொருட்கள் என்ற காரணத்தால் ஜவுளித்தொழிலில் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

பருத்தி மீது விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும். பாலியஸ்டர், விஸ்கோஸ் ஆகிய செயற்கைஇழை தடையின்றி கிடைக்க உதவும் வகையில் அவற்றின்மீது விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு ஆணையை முற்றிலும் நீக்க வேண்டும் என வலியுறுத்தினோம். கோரிக்கை கடிதமும் வழங்கினோம்.

இதுகுறித்து ஜவுளித்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்வதாக ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். அவருடன் நடந்த சந்திப்பு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x