காஞ்சிபுரம் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி போராடியவர்கள் கைது: வேல்முருகன் கண்டனம்


சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தமிழக அரசும், தமிழர்களும் தமிழ் மொழியுனர்வை நிலை நாட்ட வேண்டும். தமிழ்நாட்டின் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைத்திருப்பது கட்டாயம் என்ற அரசாணை இருக்கின்ற நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் அதனை நடைமுறைப் படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் தமிழ் முகிலன், முகிலன், தமிழ் மணி, மேகநாதன், முனுசாமி, காஞ்சி சங்கர் உள்ளிட்டோர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். அண்டை மாநிலமான கர்நாடகாவில் கன்னட மொழியில் பெயர் பலகை வைத்திருப்பது கட்டாயம் என்கின்ற நடைமுறை கடுமையாக நடைமுறைப் படுத்துவது போல தமிழக அரசும் இந்நேரத்தில் மேற்கண்ட அரசாணையை உறுதியாக நடைமுறைப் படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

x