பந்தலூரில் யானை நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்புகுழு: கூடலூர் வன அலுவலர் தகவல்


பந்தலூர்: சேரம்பாடி மற்றும் பந்தலூர் பகுதிகளில் நடமாடும் காட்டு யானையை கண்காணிக்க கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், கால்நடை மருத்துவர் கலைவாணன் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவை கூடலூருக்கு அனுப்பி வைக்க வனத்துறை தலைமையிடம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: "சேரம்பாடி மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒரு ஆண் காட்டு யானை பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் தொடர்ந்து நடமாடி வருகிறது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வனநிலத்தை ஒட்டியுள்ள தங்களது விவசாய நிலங்களில் வாழை, பாக்கு, தென்னை, மரவள்ளி கிழங்கு போன்ற பயிர், மர வகைகளைத் தொடர்ந்து பயிரிட்டு வருவதால் யானைகள் ஊருக்குள் நுழைந்து மனித விலங்கு மோதல்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டாகின்றன.

மேலும், பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூடலூர் வனத்துறை இந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கூடலூர் வனக்கோட்டத்தைச் சார்ந்த அனைத்து முன்களப் பணியாளர்களும், அதி விரைவுப் படை, யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் காவலர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் என சுமார் 75 பணியாளர்கள் 24 மணி நேரமும் யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

கூடலூர் உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் ஒரு குழு சேரம்பாடி பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பை தொடர்ந்து துரிதப்படுத்தி வருகிறது. ட்ரோன் மூலம் யானை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை கட்டுப்படுத்த முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கிருஷ்ணா மற்றும் ஸ்ரீனிவாசன் என இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப் பட்டுள்ளன. முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து சிறப்பு பயிற்சி பெற்ற யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் காவலர்கள் வரவழைக்கப் பட்டு, யானையை வனத்திற்குள் அனுப்பும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வன உயிரினம்) மற்றும் அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர் டாக்டர் கலைவாணன் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவை கூடலூருக்கு அனுப்பி வைக்க வனத்துறை தலைமையிடம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு தொடர் நடவடிக்கைகளை களப்பணியாளர்களுக்கு தீவிரமாக கண்காணித்து, உரிய வழிகாட்டி இப்பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

வனத்துறை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், விவசாய பயிர்களை பாதுகாப்பதற்காகவும், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் திரும்ப அனுப்புவதற்கும் இரவு பகலாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், இது தொடர்பான அனைத்து பணிகளையும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எனவே, சேரம்பாடி மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வனத்துறைக்கு தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வண்டும்” என்று வன அலுவலர் கூறினார்.

x