புதுச்சேரி உப்பனாறு பாலப் பணியில் ஊழலில் ஈடுபட்டோர் மீது சிபிஐ விசாரணை வேண்டும்: அதிமுக ஆர்ப்பாட்டம்


புதுச்சேரி: உப்பனாறு பாலப்பணியில் ஊழலில் ஈடுபட்டோரின் சொத்துகளை முடக்கி சிபிஐ விசாரணை கோரி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுவை மாநில அதிமுக சார்பில் உப்பனாறு கழிவு நீர் வாய்க்கால் கட்டுமான பணியில் நடைபெற்ற ஊழல் மீது சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி மேம்பால கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி ஆட்டுப்பட்டி உப்பனாறு கழிவுநீர் கால்வாய் அருகில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் அன்பானந்தம், ஜெய்லலிதா பேரவை செயலாளர், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது: ''புதுவை நகர போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நகரின் பிரதான வடிகால் கழிவு நீர் வாய்க்கால் மீது புறவழிக்கான மேம்பாலம் அமைக்க 2006ல் அப்போதைய அரசு தவறான முடிவெடுத்தது. ரூ.27 கோடியில் மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. நிதித்துறையின் ஒப்புதல் பெறாமல் நடைபெற்ற இந்த பணி சுமார் ரூ.8.92 கோடி செலவு செய்யப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆட்சியின் போதும் இந்த மேம்பாலம் கட்ட புதிதாக டெண்டர் விடுவதும், ஏதேனும் ஒரு காரணத்தால் பாலப் பணி நிறுத்தப்படுவதும், ஒப்பந்ததாரர்கள் கூடுதல் இழப்பீடு தொகை பெறுவதும் வாடிக்கையானது.

இறுதியாக சுமார் ரூ.29.25 கோடிக்கு மீண்டும் மேம்பாலத்தை முடிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ரூ.27 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பாலம் சுமார் ரூ.95 கோடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் ரூ.68 கோடி இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விஞ்ஞான ரீதியான ஊழலில் பிரதான பங்கு 2017ல் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்திய நாராயணசாமி தலைமையிலான அரசையே சாரும். மாபெரும் ஊழலை ஆட்சியாளர்களும், அரசு துறை அதிகாரிகளும் இணைந்து செய்துள்ளனர். இதன் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஊழலின் மீது ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்த அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்ய வேண்டும். இதுநாள் வரை புதுவை மாநிலத்திற்கு புயல் நிவாரண நிதியை வழங்காத மத்திய அரசை நம் ஆளுநரும், முதல்வரும் வலியுறுத்தாமல் மவுனம் காப்பது ஏன்" என்று கேட்டார்.

x