புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சட்டப்பேரவை செயலரிடம் சுயேச்சை எம்எல்ஏ நேரு மனு தந்தார்.
உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு இன்று சட்டப்பேரவை செயலாளர் தயாளனை சந்தித்தார். அப்போது, புதுவை பேரவைத்தலைவர் செல்வம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான மனுவை அளித்தார். இதன்பின் நேரு எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுவை பேரவைத்தலைவர் அந்த பதவியின் புனித தன்மையை அவமதிக்கும் வகையில் செயல்படுகிறார். சட்டமன்ற உறுதிமொழிக்குழு தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்கியதன் மூலம் அவர் பாகுபாடுடன் செயல்படுவது உறுதியானது.
அவரது தனிப்பட்ட நோக்கத்தையும், பழிவாங்கும் போக்கையும் வெளிப்படுத்தியது. இது எனது தனிப்பட்ட குற்றச்சாட்டு அல்ல, நிர்வாகத்தில் நீதி இல்லாத பார்வையில் இருந்து மதிப்பிட வேண்டும். பேரவைத்தலைவரின் போக்கு அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. அமைச்சரவையின் பங்கை மீற அவர் முயற்சிக்கிறார். அவர் நிழல் முதல்வராக செயல்படுகிறார். எந்த அரசியல் சாயத்தையும் பூசிக் கொள்ளக்கூடாது என்ற பேரவைத்தலைவரின் அரசியலமைப்பு கடமையை மீறி தொடர்ந்து செயல்படுகிறார். தற்போது, பொது கணக்கு குழு மற்றும் மதிப்பீட்டு குழு தலைவர் பதவியை அபகரித்துள்ளார். ஏனாம் சென்ற மத்திய தணிக்கை குழுவுக்கு பேரவைத்தலைவர் தலைமை தாங்கியுள்ளார்.
இதன் மூலம் அரசியலமைப்பு விதிமுறைகளை மீறி, எந்த சட்டமன்ற பேரவைத் தலைவர் பதவியிலும் முன்னோடியில்லாத எடுத்துக்காட்டை உருவாக்கி, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் புதுவை பேரவைத்தலைவர் பதவி தனது மதிப்பை இழந்துள்ளது. மேலும் அரசியல் அமைப்புகளையும், அதிகாரிகளையும் அழைப்பிதழ்களில் தனது படத்தை பிரசுரிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார். இது பேரவைத்தலைவர் பதவியின் முக்கியத்துவத்தை குறைத்துள்ளது. இவை பேரவைத் தலைவர் பதவியின் செயலிழப்பை வெளிப்படுத்துகிறது. எனவே பேரவைத்தலைவர் மீது சட்டமன்ற நடைமுறை, நடத்தை விதிகளின் படி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவை செயலகத்தில் மனு அளித்துள்ளேன்'' என்று குறிப்பிட்டார்.
தீர்மானம் ஏற்கப்படுமா என அரசு வட்டாரங்களில் கேட்டதற்கு, ''புதுவை சட்டப்பேரவையில் என்ஆர்.காங்கிரசுக்கு 10, பாஜகவுக்கு 6, சுயேச்சைகள் 6, திமுக 6, காங்கிரஸ் 2, நியமன எம்எல்ஏக்கள் 3 என மொத்தம் 33 எம்எல்ஏக்கள் உள்ளனர். நேரு எம்எல்ஏ தீர்மானத்தை காங்கிரஸ், திமுக, சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரித்தால் அது சட்டப்பேரவையில் விவாதிக்கப்படும். இத்தீர்மானத்தை தீர்மானத்தை சபையில் உள்ள உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கினர் ஆதரித்தால் மட்டும்தான் விவாதத்திற்கு ஏற்கப்படும். இல்லாவிட்டால், அந்த தீர்மானம் அங்கேயே நிராகரிக்கப்படும். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி வரை சட்டசபை கூடும் வாய்ப்பில்லை. இதனால் இந்த தீர்மானம் உடனடியாக சட்டப்பேரவையில் விவாதிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது" என்றனர்.