புதுச்சேரியில் லாட்டரியை கொண்டு வர முயற்சி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு


புதுச்சேரி: புதுச்சேரியில் லாட்டரியை கொண்டு வர முயற்சிக்கின்றனர். நிறைய குடும்பங்கள் லாட்டரியால் பாதிக்கப்பட்டு சீரழிந்துள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: "முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று மத்திய அரசிடம் அழுத்தம் தந்து வெள்ள நிவாரணம் பெற்று வந்து தந்திருக்க வேண்டும். ஆனால் அவரும், அமைச்சரும் மக்களை மதிக்கவில்லை. புதுச்சேரியில் தற்போது முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவாக 13 எம்எல்ஏ-க்கள் தான் உள்ளனர். மற்றவர்கள் வெளியே இருக்கிறார்கள். இதனால் ஆட்சி ஆட்டம் கண்டு விட்டது. பெரும்பான்மை இழந்து விட்டது. முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். இது மைனாரிட்டி அரசு.

எத்தருணத்திலும் ஆட்சி கவிழும் நிலை உருவாகியுள்ளது. புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் கட்டுமானம், குமரகுருப்பள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவை கட்டும் பணியில் ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக புதிய பேருந்து நிலையத்தில் பத்து கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது.

இதற்கு சிபிஐ விசாரணைக்கு அனுப்ப அவர் தயாரா? வரும் 2026ல் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி வந்த பிறகு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மீது விசாரணை வைத்து நடவடிக்கை எடுப்போம். புதுச்சேரியில் அரசு ஊழல் தொடர்பாக குடியரசுத்தலைவருக்கு அனுப்பி விசாரணை நடத்த கோருவோம். முதலில் நிர்வாகரீதியாக செல்வோம். அதில் நடவடிக்கை திருப்தியாக இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று குறிப்பிட்டார்.

லாட்டரி அதிபர் மகன் புதுச்சேரி அரசியலுக்கு வருவது தொடர்பாக கேட்டதற்கு, "லாட்டரி வியாபாரிகள் புதுச்சேரியில் நுழைந்து நிவாரணம் தருவதாக அரசியல் கட்சியினர், மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அமலாக்கப் பிரிவால் பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வருமானவரித் துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டோர் புதுச்சேரி வந்து முதல்வர் ரங்கசாமி ஒழுங்காக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி அரசியலில் நுழைவதாக செல்கிறார்கள்.

எங்களிடம் ஏஎப்டி மில் தந்தால் நூறு கோடி ரூபாய் தொழிலாளர்களுக்கு ஊதியம் தந்து விட்டு மில்லை லாபமாக நடத்துதாக தெரிவிக்கிறார்கள். முதல்வர் ரங்கசாமி நிர்வாகம் தெரியாதவர் என்ற கோணத்தில் பேசுகிறார். இதை பாஜக எம்எல்ஏ-க்கள், பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-க்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். பொருளாதார குற்றம் செய்தவர்கள், அரசியல் வியாபாரிகள் புதுச்சேரி அரசியலில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கிறார்கள். அது எடுபடாது.

குறிப்பாக அவர்கள் புதுச்சேரியில் லாட்டரி கொண்டு வரவும், அரசு நிலங்களை அபகரிக்கும் நோக்கத்தில் வருகிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வை காங்கிரஸ் கட்சி சார்பில் கூறவுள்ளோம். பாஜக தலைமையானது இக்குளறுபடியை சரி செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது.

மார்டின் தரப்பு காங்கிரஸ் தரப்பிலும் பேசுவதாக கேட்கிறீர்கள். நான் சுட்டுபோட்டாலும் காங்கிரஸை விட்டு செல்லமாட்டேன். சமூக பொருளாதார குற்றவாளியை எப்படி கட்சியில் சேர்க்க முடியும். இதுபெரிய பாவம். நிறைய குடும்பங்கள் லாட்டரியி்ல் பாதிக்கப்பட்டு சீரழிந்துள்ளது. ரெஸ்டோபாரை விட இது அதிகம். பெரிய பாவ பணம்." என்றார்.

x