கோவை: கால்நடைகளுக்கு 6-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்


கோவை: கோவை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு 6-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 2024 ஆண்டிற்கான கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி பணி தொடர்ந்து 21 நாட்களுக்கு 6-வது சுற்று தடுப்பூசி உள்ள பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு செலுத்தப்படுகின்றன. இந்நோய்க்கான ஊநீர் அதற்கென உருவாக்கப்பட்ட குளிரூட்டும் அறைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து ஒவ்வொரு கிராமத்திற்கும் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படும்

கால் மற்றும் வாய் (கோமாரி) நோயானது, குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயால் இறப்புகள் குறைவாக இருந்த போதும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத் திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம்.

இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு ஒவ்வொரு கிராமத்திலும், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் தங்களது கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி தவறாது செலுத்தி பயன் பெறலாம்.

x