வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த பயிற்சி: செங்கை ஆட்சியர் பங்கேற்பு


செங்கல்பட்டு / திருவள்ளூர்: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை பெதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் தற்போது வரை 6 கட்ட தேர்தல்கள் முடிக்கப்பட்டுள்ளன. இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக கடந்த மாதம்19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்கிறது. இதற்காக 102 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 102 உதவியாளர்கள், 102 நுண் பார்வையாளர்கள் பேர் ஆக மொத்தம் 206 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி நேற்று நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் விதிகளின்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

அடையாள அட்டைகள்: கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருமான ச. அருண்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப் பட்டுள்ள அலுவலர்கள் ஜூன் 4-ம் தேதி காலை 6.00 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டப்பேரவை தொகுதிக்கான கட்டிடத்தில் ஆஜராக வேண்டும். வாக்கு எண்ணும் அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை தவறாமல் அணிந்து வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் பயிற்சிகளாக வழங்கப்பட்டன.

இந்த பயிற்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

முன்னேற்பாட்டு பணிகள்: திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டு, தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள திருவள்ளூர்(தனி) மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாட்டு பணிகளைநேற்று திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

x