அரூரில் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்


அரூரில் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கால்நடைகளுடன் சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள்

அரூர்: அரூர் அருகே ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கால்நடைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரூர்- திருவண்ணாமலை சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் அருகே உள்ள நரசனேரி சுமார் 17 ஏக்கர் அளவில் பரப்பு கொண்டது. இந்த ஏரியானது தற்போது வெறும் 7 ஏக்கர் அளவில் கூட இல்லை என மக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது இந்த ஏரிக்கு அருகாமையில் உள்ள நிலத்தை தனியார் விலைக்கு வாங்கியதாகவும், ஏரியின் சுற்றுப்புறத்தில் உள்ள கரைகளை ஆக்கிரமிப்பு செய்து அங்கேயே வேலி அமைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை அம்பேத்கர் நகரில் உள்ள பொதுமக்கள் தங்களின் கால்நடைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து தகவலறிந்து வந்த வருவாய் கோட்டாச்சியர் சின்னுசாமி, காவல் துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர், வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து விரையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிக்கு பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அரூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

x