கோவில்பட்டியில் வெண் பனிப் பொழிவு: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


கோவில்பட்டி: கோவில்பட்டி, எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் பகுதியில் இன்று காலையில் கடும் வெண்பனிப் பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 12, 13, 14 ஆகிய தேதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மாவட்ட முழுவதும் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி அதன் முழு கொள்ளளவை தாண்டி விவசாய விளை நிலங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.

மழை படிப்படியாக குறைந்த நிலையில் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக லேசான பனி மூட்டம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றிரவு முதல் இன்று காலை 8 மணி வரை கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெண் பனிப் பொழிவு காணப்பட்டது.

இதன் காரணமாக போதிய வெளிச்சம் இல்லாததால் நெடுஞ்சாலைகளில் எதிரில் வரும் ஆட்கள் மற்றும் வாகனங்கள் கூட தெரியாத நிலை உருவானது. இதனால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் அதிக ஒலியை எழுப்பிக் கொண்டு முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி மெதுவாக சென்றன. உளுந்து, பாசி, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம் உள்ளிட்ட விவசாய நிலங்கள் வெண்பனி சூழ்ந்து இருந்தன.

இதன் காரணமாக விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளைப் பொறுத்தவரை இதனை மலட்டுப்பனி என கூறுகின்றனர். என் காரணமாக பயிர்களில் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். ஏற்கெனவே மழை வெள்ளத்திலிருந்து பயிர்களை காப்பாற்ற மிகவும் சிரமப்பட்டோம். இதில் தற்போது வெண்பனி காரணமாக கூடுதல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது என விவசாயிகள் கூறினர்.

காலை 7 மணிக்கு பள்ளிக்கு புறப்பட்ட மாணவர்கள் மற்றும் வேலைக்கு சென்ற மக்கள் இயல்பு வாழ்க்கை வெண்பனிப் பொழிவால் பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி நகரப் பகுதிக்குள்ளும், புறநகர் பகுதிகளிலும் கடும் வெண்பனிப் பொழிவு காணப்படுவதால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

x