சென்னை: சென்னை, தேனாம்பேட்டை, காமதேனு கூட்டுறவு அங்காடியில், கூட்டுறவுத் துறையின் மூலம் “கூட்டுறவு பொங்கல்” என்ற பெயரில் பொங்கல் தொகுப்பு விற்பனையை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் தமிழகம் முழுவதும் “கூட்டுறவு பொங்கல்” என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனை நடைபெறவுள்ளது. இந்த மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு 3 வகையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 3 வகை தொகுப்பு விவரம்: இனிப்பு பொங்கல் தொகுப்பில் பச்சரிசி- 500 கிராம், பாகுவெல்லம் - 500 கிராம், ஏலக்காய் - 5 கிராம், முந்திரி - 50 கிராம், ஆவின் நெய் - 50 கிராம், பாசி பருப்பு - 100 கிராம், உலர் திராட்சை -50 கிராம் என 7 பொருட்கள் இருக்கும். சிறிய பையுடன் ரூ.199 என்ற விலையில் விற்கப்பட உள்ளது.
சிறப்பு பொங்கல் தொகுப்பில் மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசிபருப்பு, உளுந்து, கூட்டுறவு உப்பு, நீட்டு மிளகாய், தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், செக்கு கடலை எண்ணெய், கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், சோம்பு, பெருங்காயம் என 19 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மளிகை பையுடன் ரூ.499-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் பெரும்பொங்கல் தொகுப்பில், சிறப்பு பொங்கல் தொகுப்பில் உள்ள 19 பொருட்களுடன், பச்சை பட்டாணி, வெள்ளை சுண்டல், வேர்க்கடலை, ஏலக்காய், வரகு, சாமை, திணை, ரவை, அவல், ராகி மாவு, கோதுமை மாவு, ஜவ்வரிசி, வறுத்த சேமியா, மல்லித்தூள், சாம்பார் தூள் என 34 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பெரும் பொங்கல் தொகுப்புடன் மட்டும் அரை கிலோ நாட்டு சர்க்கரை இலவசமாக வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், துறையின் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன், கூடுதல் பதிவாளர் ப.காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோன்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் அமுதம் அங்காடிகள் மூலம்ரூ.999 விலையில் 20 மளிகை பொருட்கள் அடங்கிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு மளிகை தொகுப்பு விற்பனையை சென்னையில் அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று தொடங்கி வைத்தார்.
மசாலா பொருட்கள்: இதில், மஞ்சள்தூள், சர்க்கரை, பாசுமதி அரிசி, ரவை, மைதா, ஆட்டா, சூரியகாந்தி எண்ணெய், அமுதம் ஸ்பெஷல் (பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, மராட்டி மொக்கு, கல்பாசி) வெல்லம், நெய், சேமியா, முறுக்கு மாவு, அதிரசமாவு, பிரியாணி மசாலா, கரம் மசாலா, சாம்பார் பொடி, இட்லி பொடி, பெருங்காயத்தூள், சிக்கன் 65 மசாலா, மீன் மசாலா ஆகிய பொருட்கள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.