அம்பேத்கருக்கு எதிராக பாஜக ஒருபோதும் செயல்பட்டதில்லை: அண்ணாமலை உறுதி


பாஜக ஒருபோதும் அம்பேத்கருக்கு எதிராகச் செயல்பட்டதில்லை என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்துள்ள அவமானங்களைத்தான் அமித்ஷா பட்டியலிட்டுள்ளார். அம்பேத்கர் வாழ்ந்த இடத்தை வாங்கி, மக்கள் பார்வையிடும் இடமாக பாஜக மாற்றியுள்ளது. ‘இந்தி தெரியாது’ என்று கூறிய உதயநிதிக்கு, அமித்ஷா பேசியதில் என்ன புரிந்தது? அவரது பதவிக்கும், தகுதிக்கும் ஏற்றவாறு பேச வேண்டும்.

தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த பாஷாவுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. பரோலில் வெளிவந்து உயிரிழந்த அவரை மத அடிப்படையில் அடக்கம் செய்யலாம். அதேநேரத்தில், தியாகிகளை விதைத்துள்ளோம் என்று கூற வேண்டியதில்லை. அவரது இறுதி ஊர்வலத்துக்கு காவல் துறை மறைமுக அனுமதி வழங்கியுள்ளது. அண்ணன் சீமானின் நடவடிக்கையை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் பாஜக முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான கட்சி. அதேநேரத்தில், பயங்கரவாதத்துக்குத்தான் எதிரானவர்கள். பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களை தடுக்க மாட்டோம் என்று கூறிய காவல் துறை, பாஜக பேரணியின்போது எப்படி செயல்படும் என்பதை கவனிக்க வேண்டும். என்ஐஏ குற்றப் பத்திரிக்கையை நன்றாகப் படித்தால், கோவையில் எந்த அளவுக்கு பயங்கரவாதம் இருக்கிறது என்பது தெரியும்.

அம்பேத்கர் எனக்கு கடவுள். அவர் வழிகாட்டியபடி நான் அரசியல் செய்கிறேன். நான் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், மாவட்ட செயலாளர்களில் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை திமுக எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேருவுக்கு பாரத ரத்னா கொடுத்த காங்கிரஸ், அம்பேத்கரை மறந்தது ஏன்? 1980-ல் ஜனதா கட்சி ஆட்சி வந்த பிறகுதான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

தவெக கட்சி தலைவர் விஜய் கோவாவுக்கு சென்றபோது அவரது புகைப்படம் விமான நிலையத்தில் இருந்து வெளிவந்தது எப்படி? இதுதான் திமுகவின் அரசியல் நாகரிகம். நடிகர் விஜய் தமிழக அரசியலை உற்றுநோக்க வேண்டும்.

அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ உள்ளது அதைத்தான் 1968-ம் ஆண்டுக்குப் பிறகு பாஜக மீண்டும் கொண்டுவந்துள்ளது. பாஜக ஒருபோதும் அம்பேத்கருக்கு எதிராக செயல்பட்டதில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

x