அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சுக்கு எதிர்ப்பு: அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மன்னிப்பு கோர வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய அரசியலமைப்புச் சிற்பியை அமித் ஷா அவமதித்துவிட்டதாகவும் தனது பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.'
முன்னதாக அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின் போது மாநிலங்களவையில் உரையாற்றிய அமித் ஷா, "பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.
அமித் ஷாவுக்கு ஆதரவாக களமிறங்கிய மோடி: தாங்கள் இத்தனை ஆண்டுகளாக அம்பேத்கரை அவமதித்த செயல்களை தீங்கிழைக்கும் பொய்கள் மூலம் மறைக்க முடியும் என்று காங்கிரஸும் அதன் அழுகிப்போன சுற்றுச்சூழலும் நம்புமானால், அவர்கள் தவறிழைக்கிறார்கள் என்று அர்த்தம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பி.ஆர். அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கள் குறித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு பிரதமர் மோடி இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், டாக்டர் அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினை அவமதிக்கவும் பரம்பரியமாக ஒரு குடும்பத்தால் வழிநடத்தப்படும் கட்சியொன்று ஆண்டாண்டு காலமாக எப்படி நடந்து கொண்டது என்பதை இந்திய மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
‘‘பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றிக் கவலைப்பட வேண்டும்’’ - “அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்டமாக எதிர்வினையாற்றி உள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: "வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.
இதன் காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிச.24ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘டெங்கு’ அதிகரிப்பு - விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல் - கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றும் நோய் பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு மேலும் ரூ.400 கோடி: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரப்பெற்றுள்ள ரூ.400 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ.1451.34 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.
சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்: கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்ததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சவுக்கு சங்கரை சென்னையில் செவ்வாய்க்கிழமை கைது செய்த தேனி போலீஸார், புதன்கிழமையன்று காவல் நிலையத்துக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்த பின்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
டிச. 21-ல் விழுப்புரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் வரும் 21ம் தேதி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஆஸ்கர் ரேஸிலிருந்து வெளியேறிய ‘லாபத்தா லேடீஸ்’ - இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆமீர்கான் புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் இடம்பெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். அதேநேரத்தில் இந்த பயணம் முழுவதிலும் எங்களுக்கு கிடைத்த ஆதரவுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்த நிலையில் அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.
கடந்த 2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 38 வயதான அஸ்வின் , 105 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 63 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர். அனைத்து பார்மெட் கிரிக்கெட்டிலும் மொத்தமாக 4,394 ரன்கள் மற்றும் 765 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அரசு போக்குவரத்து கழகத்தில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.