சேலம் | மாணவர்கள் சுவேத நதியில் இறங்கி பள்ளிக்கு செல்லும் நிலை: பாலம் அமைக்க மக்கள் வலியுறுத்தல்


தம்மம்பட்டி அருகே கோனேரிப்பட்டியில், சுவேத நதியின் குறுக்கே பாலம் இல்லாததால் ஆபத்தான நிலையில் நதியை கடந்து செல்லும் பள்ளி மாணவ,மாணவிகள். | படம்: எஸ்.குரு பிரசாத் |

சேலம்: தம்மம்பட்டி கோனேரிப்பட்டியில் சுவேத நதியின் குறுக்கே பாலம் இல்லாததால் மாணவர்கள் தினமும் ஆற்று நீரில் இறங்கி ஆபத்தான முறையில் பள்ளிக்கு சென்று வர வேண்டிய நிலை நீடிக்கிறது. பல ஆண்டு கால கோரிக்கையை ஏற்று, சுவேத நதியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கெங்கவல்லி வட்டம் தம்மம் பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கோனேரிப்பட்டி பகுதி, சுவேத நதியின் கரையில் அமைந்துள்ளது.

இங்கிருந்து பாரதிபுரம், பெல்ஜியம் காலனி, நாகியம்பட்டி, கொண்டயம் பள்ளி ஆகிய கிராமங்களுக்குச் செல்வ தற்கு, சுவேத நதியை மக்கள் கடந்து செல்ல வேண்டும். எனினும், சுவேத நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலங்களில், மக்கள் 10 கிமீ தொலைவுக்கு சுற்றிக் கொண்டு அருகில் உள்ள கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கோனேரிப்பட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். மழைக்காலங்களில் சுவேத நதியில் நீரோட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், மழைக்காலங் களில் ரேஷன் கடைக்கு செல்வது, விளை பொருட்களை மறு கரையில் உள்ள பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வது ஆகியவற்றுக்கு ஆற்றில் இறங்கி, நீரோட்டத்தைக் கடந்து மறு கரைக்கு செல்ல வேண்டிய இக்கட்டான நிலை உள்ளது.

ஆனால், பள்ளிக்கு சென்று வரும் சிறுவர்களும், சுற்றுப் பாதையில் செல்வதால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, ஆற்றின் நீரோட்டத்தில் இறங்கி, ஆபத்தான முறையில் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, கோனேரிப்பட்டியில், சுவேத நதியின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இதனிடையே, கோனேரிப்பட்டியில் சுவேத நதியின் குறுக்கே பாலம் அமைக்கக்கோரி, பாமக மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயராசா தலைமையில் அக்கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

x