அமித்ஷா தனது வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தி விட்டார்: அம்பேத்கர் கருத்துக்கு திருமாவளவன் சீற்றம்


சென்னை: அம்பேத்கரைப் பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?. எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்திவிட்டார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?. எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.

அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள். புரட்சியாளர் அம்பேத்கர் "விசுவரூபம் " எடுக்கிறார். சனாதனிகளின் சதி முயற்சிகள் சாம்பலாகும்!’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின் போது மாநிலங்களவையில் நேற்று உரையாற்றிய அமித் ஷா, "பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்.

அம்பேத்கரின் பெயரை 100 மடங்கு அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், அவரைப் பற்றிய உங்கள் உணர்வு என்ன என்பதை நான் கூற விரும்புகிறேன். ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல் அமைச்சரவையில் இருந்து பி.ஆர். அம்பேத்கர் ராஜினாமா செய்ய நேரிட்டது. பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரை நடத்துவதில் திருப்தி இல்லை என்று அம்பேத்கர் பலமுறை கூறியுள்ளார். அவருக்கு ஒரு உத்தரவாதம் வழங்கப்பட்டது. அந்த உத்தரவாதம் நிறைவேறாததால், அவர் ராஜினாமா செய்தார்" என்று கூறி இருந்தார்.

இந்திய அரசியலமைப்புச் சிற்பியை அமித் ஷா அவமதித்துவிட்டதாகவும் தனது பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

x