புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு


திருவள்ளூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து நின்றதால், புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 200 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இந்த ஏரிக்கு, கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அதிகளவில் மழைநீர் புழல் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியிலிருந்து கடந்த 13ம் தேதி காலை முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த வெளியேற்றம் தொடக்கத்தில் விநாடிக்கு 500 கனஅடி என இருந்த நிலையில், கடந்த 14ம் தேதி இரவு விநாடிக்கு ஆயிரம் கன அடியாக அதிகரித்தனர் நீர்வள ஆதாரத்துறையினர்.

இந்நிலையில், மழையில்லாததால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து புழல் ஏரிக்கு வரும் நீர் வரத்து இன்று காலை நின்றது. ஆகவே, புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவை இன்று காலை 6 மணியளவில் விநாடிக்கு 500 கனஅடியாக குறைத்த நீர் வள ஆதாரத் துறை அதிகாரிகள்.

தொடர்ந்து, அவர்கள் இன்று காலை 10 மணியளவில், புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு 200 கன அடியாக குறைத்துள்ளனர். இதனால், இன்று காலை நிலவரப்படி, 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 2,699 மில்லியன் கனஅடி நீர் இருப்பும், 18.45 அடி நீர் மட்டமும் உள்ளது.

x