ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை முற்றிலுமாக எதிர்க்கிறோம்: கனிமொழி எம்.பி. கருத்து


மாநில சுயாட்சிக்கும் அடிப்படை உரிமைக்கும் எதிரான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவை முற்றிலுமாக எதிர்க்கிறோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதா குறித்து டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கூட்டாட்சிக்கு எதிராக எதையும் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 13 பேர் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. மாநில மக்கள் 5 ஆண்டுகளுக்கான ஒரு அரசை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த மாநில அரசை கலைக்க தேர்தல் ஆணையத்துக்கு உரிமை வழங்கக்கூடிய ஒரு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மாநில பிரச்சினைகளையும், மத்தியில் உள்ள பிரச்சினைகளையும் நாடு முழுவதும் உள்ள இதர பிரச்சினைகளையும் ஒரு குழப்பத்தில் கொண்டுபோய் நிறுத்தி, மாநில அரசுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்யக்கூடிய நிலைக்குத்தான் இந்த சட்ட மசோதா கொண்டு செல்லும். அதையும் தாண்டி இது அதிபர் தேர்தலுக்கும் வழிவகுக்கும். அடுத்தகட்டம் அங்குதான் போய் நிற்கும்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையால் செலவினங்கள் குறையும் என்கிறார்கள். சில மாநிலங்களுக்குக்கூட ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த முடியாமல், 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தச் சூழ்நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தினால் அதற்கான தேர்தல் ஏற்பாடுகள் எப்படி நடக்கும்? தேர்தலில் வேலை செய்யக்கூடிய அதிகாரிகள் எங்கிருந்து உருவாக்கப்படுவார்கள்? இதுபோல பல கேள்விகள் இருக்கின்றன. இது தேவையில்லாமல் அரசு மீதும் தேர்தலின் மீதும் சுமையை ஏற்றக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும்.

முக்கியமான விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகக்கூட இது இருக்கலாம். இல்லையெனில், தன்னால் நினைத்ததை எல்லாம் சாதித்துவிட முடியும் என்ற மனநிலையில் கொண்டு வந்ததாகக்கூட இருக்கலாம். ஆனால், இந்த சட்ட மசோதாவை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற அடிப்படையையே நாங்கள் எதிர்க்கிறோம். இருந்தபோதும், நாடாளுமன்ற நிலைக்குழு உருவாக்கப்பட்ட பிறகுதான் இந்த சட்ட மசோதாவில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பது தெரியும்.

அதேநேரம், இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லியிருந்தாலும், இந்த மசோதாவை நாங்கள் முற்றிலுமாகவே எதிர்க்கிறோம். முதல்வரும் இதை தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

x