சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செவல்பட்டியில் பட்டாசு ஆலையில் இன்று (டிச.17) மாலை வெடி விபத்து ஏற்பட்டது. உடனே அங்கிருந்து தொழிலாளர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வெடி விபத்தில் 3 அறைகள், 3 வாகனங்கள் சேதமடைந்தன.
சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர் கருப்பசாமி (30). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செவல்பட்டி கிராமத்தில் இயங்கி வருகிறது. சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 10க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
வழக்கம்போல், இன்று மாலை பட்டாசு உற்பத்தியில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு ரசாயன மூலப்பொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ரசாயன வேதிமாற்றம் ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது ரசாயன அறை வெடித்துச் சிதறியது. உடனே அருகிலிருந்த தொழிலாளர்கள் ஆலையிலிருந்து வெளியேறினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஆனாலும், ரசாயன ஆலை மட்டுமின்றி அடுத்தடுத்து இருந்த இரு அறைகளும் வெடி விபத்தில் சேதமடைந்தன. அதோடு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 வாகனங்களும் சேதமடைந்தன. தகவலறிந்த வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.