திருவண்ணாமலை தீபத் திருவிழா: 108 ஆம்புலன்ஸ் சேவையால் 574 பேர் பயனடைந்தனர்!


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழாவில், கடந்த 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி 574 பேர் பயனடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பரணி தீபம் மற்றும் மகா தீபம் கடந்த 13ம் தேதி ஏற்றப்பட்டன. கார்த்திகைத் தீபத் திருவிழா, பவுர்ணமி கிரிவலம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என தொடர்ந்து 3 நாட்களுக்கு பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும், அண்ணாமலையார் கோயிலில் சுமார் 1.80 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

இதையொட்டி, கடந்த 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை 108 ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாநகரம், அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவல பாதையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. மேலும் முப்பது 108 ஆம்புலன்ஸ், 15 சிறிய ரக ஆம்புலன்ஸ் மற்றும் 15 இருசக்கர வாகன அவசர கால முதலுதவி வாகனம் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. கோயில் உள் பகுதி, மாநகரம், தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.

கோயில் உள்ளே ஒரு சிறப்பு மருத்துவக் குழுவும், அபய மண்டபம் அருகே 24 மணி நேர இலவச அவசர சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டிருந்தன. 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக 574 பேர் பயனடைந்துள்ளனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தவர்கள், 108 ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவ மையங்களுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் தீப திருவிழா நாளான 13ம் தேதி மட்டும் 233 பேர் பயனடைந்துள்ளனர்.

அவசர மையத்தில் ‘524’: மேலும், அபய மண்டபம் அருகே அமைக்கப்பட்டிருந்த 24 மணி நேர இலவச சிகிச்சை மையத்தில் 524 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மூச்சு திணறல், காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி, கால் வலி மற்றும் வலிப்பு நோய் உள்ளிட்டவைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் தீபத் திருவிழா நாளான 13-ம் தேதி மட்டும் 268 பேர் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

x