கள்ளக்குறிச்சி அதிர்ச்சி: பெண் கிராம நிர்வாக அலுவலரை அறையில் வைத்து பூட்டிய கிராம உதவியாளர்!


கிராம உதவியாளர் சங்கீதா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெண் கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் உள்ளேயே வைத்து பூட்டி விட்டு சென்ற பெண் கிராம உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த வடகனந்தல் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசி. இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அதே அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணிபுரியும் சங்கீதா என்பவர் தமிழரசியை அலுவலகத்தில் உள்ளே வைத்து பூட்டி விட்டு, அலுவலக பதிவேடுகளை எடுத்துக்கொண்டும் எடுத்துச் சென்றுள்ளார். இதையடுத்து உள்ளிருந்த தமிழரசி, சங்கீதாவை நோக்கி பூட்டை திறந்துவிடுமாறு கோரியதையும் பொருட்படுத்தாத சங்கீதா, அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சின்னசேலம் வட்டாட்சியர் மனோஜ் முனியன் மற்றும் வருவாய்த் துறையினர் வடக்கனந்தல் விஏஒ அலுவலகத்திற்குச் சென்று, பூட்டை திறந்து, தமிழரசியை வெளியே கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விஏஓ தமிழரசி கொடுத்தப் புகாரின் பேரில், கிராம உதவியாளர் சங்கீதா மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக வருவாய் துறையினர் கூறியுள்ளனர்.

இச்சம்பவம், குறித்து வருவாய்த் துறையினர் கூறியதாவது, கிராம உதவியாளரான சங்கீதா பணியில் சேர்ந்ததில் இருந்து, சரியாக வேலைக்கு வரமாட்டார் என்றும் வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்ய வரும் நாளில் கூட அலுவலகம் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. அதனால் தமிழரசிக்கும், சங்கீதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இருவரும் சரிவர பேசிக்கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.

x