கரூர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட வேலை, நலவாரியம், குடிமனைப் பட்டா, வீடு கேட்டு கரூர் மாவட்ட தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் முதல்வருக்கு அனுப்புகின்ற கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் வழங்க முன்னதாக கரூர் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று (டிச.17ம் தேதி) காலை 11.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். சரஸ்வதி, குங்குமாயி, பாலாயி, கலைச்செல்வி, பொம்மாயி, சித்ரா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பாலன், முன்னாள் மாவட்ட தலைவர் குப்புசாமி, அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு (ஏஐஒய்எப்) லட்சுமிகாந்தன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மாணிக்கம், பரமத்தி ஒன்றியம் சாமிநாதன், தாந்தோணி ஒன்றியம் ரமேஷ், சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் ஆட்சியர் அலுவவகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் அனைவருக்கும் 100 நாட்கள் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும். திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தி வேலை வழங்க வேண்டும். குடிமனை இல்லாத அனைவருக்கும் உடனடியாக அரசே கணக்கெடுத்து குடிமனைப் பட்டா வழங்க வேண்டும்.
சேதமடைந்த தொகுப்பு வீடுகளை போர்க்கால அடிப்படையில் மராமத்து செய்து கொடுத்திடவேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்துவிட்டு, விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைத்திடவேண்டும். புதிய ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நிபந்தனையின்றி விரைவாக புதிய ரேஷன் அட்டை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.