விருதுநகர்: செல்போன் கொடுக்காமலும், இணைய சேவை வசதி கொடுக்காமலும் சொந்த செல்போன்கள் மூலம் மின் அளவீடு செய்ய மின் வாரியம் வற்புறுத்துவதால் மின் கணக்கீட்டாளர்கள் தவித்து வருகின்றனர். மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலம் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப் பட்டு வருகிறது.
ஏற்கெனவே இருந்த காந்தவியல் மின் அளவீட்டுக் கருவிகள் அனைத்தும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எலெக்ட்ரானிக் மின் மீட்டர்களாக மாற்றப்பட்டன. தற்போது, இந்த எலெக்ட்ரானிக் மின் மீட்டர்கள் மூலமே மின் பயன்பாட்டு அளவு (யூனிட்) கணக்கீடு செய்யப்படுகிறது. இதற்காக, பேட்டரியில் இயங்கும் ரீடிங் இயந்திரமும் மின் கணக்கீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 9 லட்சத்து 680 மின் இணைப்புகள் உள்ளன. இதுதவிர விவசாயப் பயன் பாட்டுக்கான மின் இணைப்புகளும் கூடுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், செல்போன்கள் மூலம் மின் மீட்டர்களுடன் டேட்டா கேபிள் இணைத்து மின் அளவீட்டை கணக்கீடு செய்ய வேண்டும் என மின் கணக்கீட்டாளர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், மின் கணக்கீட்டாளர்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மின் கணக்கீட்டாளர்கள் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் 78 மின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மாவட்டம் முழுவதும் சுமார் 80-க்கும் மேற்பட்ட மின் கணக்கீட்டாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு மின் கணக்கீட்டாளர் 190 சர்வீஸ்களில் மின் அளவீடு செய்ய வேண்டும். தற்போது செல்போன்கள் மூலமே மின்சார அளவீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், மின் வாரியம் மூலம் இதுவரை யாருக்கும் செல்போன்கள் வழங்கவில்லை. இணைய சேவையோ அல்லது அதற்கான தொகையோ வழங்கப்படவில்லை.
அனைவரும் சொந்த செல்போன் களிலேயே சொந்த டேட்டாவை பயன் படுத்தி மின் அளவீடு செய்கிறோம். சில இடங்களில் இணைய சேவை இல்லையெனில் மின் அளவீடு செய்ய முடியாது. இணைய சேவை கிடைக்கும் வரை ஒரு மணி நேரம் காத்திருந்து அளவீடு செய்ய வேண்டியுள்ளது. இதனால் காலதாமதம் ஆகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அளவீட்டு குறியீட்டை முடிக்க முடியவில்லை. எனவே, மின் கணக்கீட்டாளர்களுக்கு நிர்வாகமே செல்போன் கொடுக்க வேண்டும். அதற்கு இணைய சேவைக் கான டேட்டாவும் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் தொய்வின்றி பணியாற்ற முடியும் எனத் தெரிவித்தனர்.