கோவை: கோவை மாவட்டத்தில் 1,428 பயனாளிகளுக்கு ரூ.49.98 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குப்பட்ட, நாச்சிபாளையம் ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு கட்டுமானப் பணிகளை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது: "தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காகவும் முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி, வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது.
‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக 2024-25-ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி பரப்பளவில், ரூ.3.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில், 85 பயனாளிகளுக்கு ரூ.2.97 கோடி மதிப்பீட்டிலும், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் 137 பயனாளிகளுக்கு 4.79 கோடி, காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் 363 பயனாளிகளுக்கு 12.70 கோடி, மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் 141 பயனாளிகளுக்கு 4.93 கோடி என மொத்தம் 1,428 பயனாளிகளுக்கு ரூ.49.98 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.87 கோடி மதிப்பீட்டில் 39 பள்ளிகளில் அங்கன்வாடி மையங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வரை ரூ. 4.60 கோடி மதிப்பீட்டில் 37 பள்ளிகளில் அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார். நாச்சிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கே.சசிபிரியா, துணைத் தலைவர் எஸ்.நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குப்பட்ட, நாச்சிபாளையம் ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு கட்டுமான பணிகளை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று ஆய்வு செய்தார்.