கோவில்பட்டி: மானாவாரி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி மதுரை - தூத்துக்குடி தேசிய நான்கு வழிச்சாலையில் வெம்பூர் விலக்கில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய பகுதிகளில் வானம் பார்த்த பூமியான மானாவாரி நிலங்கள் உள்ளன. இங்கு உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், சின்ன வெங்காயம், கொத்தமல்லி, சூரியகாந்தி மற்றும் முண்டு வத்தல் உள்ளிட்டவைகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக காட்டுப் பன்றிகள் மக்காச்சோள பயிரை சேதப்படுத்தி வருகின்றன.
முதலில் மக்காச்சோளத்தை மட்டும் தின்று சேதப்படுத்திய பன்றிகள், தற்போது வெள்ளைச் சோளத்தையும் தின்று அழித்து வருகின்றன. மக்காச்சோளம் மற்றும் வெள்ளைச் சோளம் பயிரிடப்பட்டுள்ள காடுகளுக்கு செல்லும் பன்றிகள் இடையே உள்ள உளுந்து, பாசி, சூரிய காந்தி உள்ளிட்ட பயிர்களையும் சேதப்படுத்திவிட்டு சென்று விடுகின்றன. மேலும் கடந்த 3 மாதங்களில் விவசாய நிலங்களுக்கு சென்ற 4 விவசாயிகளை காட்டுப் பன்றிகள் தாக்கி உள்ளன.
எனவே காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தவும், விவசாயிகளை பாதுகாக்கவும் வலியுறுத்தி மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வெம்பூர் விலக்கில் 17ம் தேதி தமாகா சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தை புறக்கணித்த தமாகாவினர் அறிவித்தபடி இன்று காலை வெம்பூர் விலக்கில் விவசாயிகளுடன் திரண்டனர். தமாகா வடக்கு மாவட்ட தலைவர் கே.பி. ராஜகோபால், அதிமுக ஒன்றிய செயலாளர் தனபதி, கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன், வெம்பூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திருப்பதி மற்றும் ஏராளமான விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை ஏற்காத விவசாயிகள், காட்டுப் பன்றிகள் விஷயத்தில் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டவாறு, நான்கு வழிச்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். சுமார் அரை மணி நேரம் நடந்த மறியல் போராட்டத்தால் மதுரை-தூத்துக்குடி மார்க்கத்தில் வந்த வாகனங்களை, எதிர்திசை வழியாக போக்குவரத்துமாற்றிவிடப்பட்டது.