ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜாவுக்கு அவமதிப்பா? - நடந்தது என்ன?


வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த இளையராஜா.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டதாக சர்ச்சை வெளியான நிலையில் மறுப்பு தெரிவித்து ஜீயர், இளையராஜா, அறநிலையத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு, ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு இளையராஜா இசையமைத்த திவ்ய பாசுரம் கலை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஶ்ரீசடகோப ராமானுஜ ஜீயர், திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் ஆகியோருடன் இளையராஜா ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவர் வசந்த மண்டபத்தை தாண்டி அர்த்த மண்டப வாசல் அருகே வந்தபோது, கோயில் அர்ச்சகர் சின்ன ஜீயரிடம், வசந்த மண்டபத்தில் நின்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் எனக் கூறினார். அதை இளையராஜாவிடம் சின்ன ஜீயர் கூறியதும், அவர் அர்த்த மண்டப வாயிலில் நின்று சுவாமி தரிசனம் செய்தார். கோயில் அர்ச்சகர்கள் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர், இளையராஜா ஆகிய 3 பேருக்கும் ஆண்டாள் சூடிய மாலை மற்றும் பட்டு வஸ்திரம் கட்டி மரியாதை செய்தனர். இளையராஜாவுக்கு ஆண்டாள் படம் மற்றும் பிரசாதத்தை இணை ஆணையர் செல்லத்துரை வழங்கினார். இதற்கிடையே ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் அளித்த விளக்கத்தில், ஆண்டாள் கோயிலில் டிச.15-ம் தேதி ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர், இசையமைப்பாளர் இளையராஜா உடன் சுவாமி தரிசனம் செய்தார். ஆண்டாள் கோயில் கருவறையில் மூலவரும், அர்த்த மண்டத்தில் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர். எனவே இத்திருக்கோயிலின் மரபுபடி அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை.

இளையராஜா ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் உடன் வந்தபோது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல்படி ஏறியபோது உடன் இருந்த ஜீயர் மற்றும் கோயில் மணியம் ஆகியோர் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்யலாம் என கூறிய உடன் அவரும் ஒப்புக்கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார். ஜீயர் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார், என தெரிவித்துள்ளார்.

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் சார்பில், ‘‘ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டது. இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் தரிசனம் செய்துவிட்டு, மனநிறைவுடன் சென்றார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வதந்தியை நம்பவேண்டாம்: இந்நிலையில், இளையராஜா தனது சமூக வலைதளப் பதிவில், ‘‘என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக் கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றனர். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்’’ என தெரிவித்துள்ளார்.

x