கோவை: நூற்பாலை நவீனமயமாக்கலுக்கு 6 சதவீத வட்டி மானியம் அறிவிப்பு வழங்கியதற்கு ‘சைமா’ சார்பில் ஜவுளித் தொழில்துறையினர் சென்னையில் திங்கட்கிழமை (டிச.16) முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக ஜவுளி மற்றும் ஆடைத் தொழில் நாட்டின் மூன்றின் ஒரு பங்கை கொண்டு தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறது.
நிறுவப்பட்டுள்ள நூற்புத்திறனில் (நூற்பு கதிர்கள், ஓபன் எண்ட் கதிர்கள் மற்றும் ஏர்வோர்டெக்ஸ் கதிர்கள்) முன்னோடியாகவும், நுால் ஏற்றுமதியில் நாட்டில் முன்னணி மாநிலமாக உள்ளது. மேலும், நூற்பு இயந்திரங்கள் மற்றும் அவற்றிற்கான உதிரி பாகங்கள் உற்பத்தியில் நாட்டின் முக்கிய பகுதியாக தமிழகம் விளங்குகிறது. மேலும், தமிழக ஜவுளித்துறை ரூ.75,000 கோடி அந்நியச் செலவாணியை ஈட்டி தொழில்துறை ன்னேற்றத்தில் தனது பங்கை செலுத்தி வருகிறது.
இருப்பினும், மாநிலத்தில் உள்ள 19 மில்லியன் இயங்கும் நூற்பு கதிர்களில், 12 மில்லியனுக்கு அதிகமான கதிர்கள் 15 வருடங்களுக்கு மேலானவை. சந்தையில் நீடித்த மந்தநிலை, உலகெங்கிலும் உள்ள புவிசார் அரசியல் சிக்கல்களின் விளைவாக குறைந்த ஏற்றுமதி தேவை. நியாயமற்ற மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் அதிக போக்குவரத்து செலவு போன்ற காரணங்களால் ளால் நூற்பாலைத்துறை நவீனமயமாக்க செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தது.
நூற்பாலை நவீனமயமாக்கலின் அவசியத்தை உணர்ந்து, தமிழக அரசு 2024- 25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 15 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலான நூற்பாலைகளை நவீனபடுத்த 6 சதவீத வட்டி மானியத்தை அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக 2024 டிசம்பர் 9-ம் தேதி தமிழக அரசின் கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதித்துறை இத்திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 15 ஆண்டுகளுக்கு மேலான நூற்புகதிர்களை கொண்டுள்ள நூற்பாலைகள் ஐந்து ஆண்டுகளுக்கு லுகையை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர், சுந்தரராமன் அவர்கள் அகில இந்திய ஜவுளி சம்மேளனத்தின்(சிட்டி) முன்னாள் தலைவர் ராஜ்குமார். தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) கெளரவ செயலாளர், ஜகதேஷ் சந்திரன், மறுசுழற்சி ஜவுளி சங்கத்தின், தலைவர்,ஜெயபால், ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின் தலைவர், அருள்மொழி ஆகியோர் தலைமையிலான குழுவினர் தமிழக முதலமைச்சர், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆகியோரை சென்னையில் திங்கட்கிழமை நேரில் சந்தித்து நன்றி கூறினர்.
தேவை குறைவு காரணமாக நாட்டில் ஜவுளித் தொழிலில் நிலவும் மந்தநிலை, பணிக்கு போதிய ஆட்கள் கிடைக்காதது மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் அந்தந்த மாநிலங்களின் ஜவுளித்துறைக்கு அளித்துள்ள பெரும் சலுகைகள் காரணமாக தமிழக ஜவுளித் தொழில் நெருக்கடியை சந்தித்து வருவதை முதலமைச்சர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சரிடம் தெரிவித்தது.
இத்தகைய சூழலில் அரசு அறிவித்த கொள்கை முடிவு சரியான நேரத்தில் வந்துள்ளது என்றும், இதன் மூலம் தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள் நவீனமயமாகி மற்ற மாநிலங்களில் உள்ள நூற்பாலைகளோடும், உலக அளவிலும் போட்டியிட வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று சைமா குழு தெரிவித்தது.
2024-25 நிதியாண்டின் மீதமுள்ள காலத்திற்கு ரூ.10 கோடி நிதியினை உடனடியாக ஒதுக்கியதற்கு அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.